ஆதித்தமிழர் பேரவை சார்பில், தேர்தல் பணிக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று (19.12.2020) திருச்சியில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் அதியமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அவர் பேசுகையில், ''அருந்ததியர்களுக்குத் தேர்தலில் வாய்ப்பு அதிகம் கிடைக்க வேண்டும். எனவே தேர்தலுக்கான பணியை ஆதித்தமிழர் பேரவை தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று திண்ணைப் பிரச்சாரம் செய்வதற்காக ஆதித்தமிழர் பேரவை, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்வதற்கான பணிகளை விரைந்து செய்துகொண்டிருக்கிறது.
மேலும் ஆதித் தமிழர் பேரவை, வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்க்கிறது. அதேபோல புதிய கல்விக் கொள்கையைக் கடுமையாக எதிர்க்கிறது. இந்த நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஆட்சியில் பல்வேறு இடங்களில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், சில இடங்களில் சட்டத்துக்குப் புறம்பாகவும் சில வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆதித்தமிழர் பேரவை அதை வன்மையாகக் கண்டிக்கிறது.
வருகின்ற ஆட்சியிலே ஆதித்தமிழர் பேரவையின் கோரிக்கையாக தீரன் சின்னமலையின் தளபதியாக விளங்கிய புல்லானுக்கு ஈரோட்டிலே ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர், கரோனா காலத்தில் பொதுமக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை ஏற்காத அரசு, இன்று பொங்கலுக்கு 2,500 ரூபாய் கொடுப்பது தேர்தலுக்கான லஞ்சம்'' என்று குற்றம் சாட்டியுள்ளார்.