எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாடு மீனவர்கள் 23 பேரை கைது செய்துள்ளது இலங்கை கடற்படை.
நாகை துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி 23 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கைது செய்யப்பட்ட 23 பேரையும் இலங்கை காரைநகர் பகுதியில் தனிமையில் வைத்துள்ளனர்.
கடந்த 26ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இலங்கை கடற்படையால் 23 தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது நாகையில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.