பெரும்பாலும் புதிதாகப் பிரியாணி கடைகள் திறக்கும் பொழுது 10 ரூபாய்க்கு ஒரு பிரியாணி அல்லது ஒரு பிரியாணி வாங்கினால் ஒன்று இலவசம் போன்ற நூதன விளம்பரங்களைப் பார்த்திருப்போம். கடை திறக்கும் நாளிலேயே மக்கள் கூட்டம் கடையில் அலைமோத வேண்டும் எனக் கடையின் உரிமையாளர்கள் இந்த நூதன முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
ஆனால் தற்பொழுதெல்லாம் இதைவிட மேலும் நூதனமாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பிரியாணி கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கரூரில் 'திண்டுக்கல் பிரியாணி' என்ற புது பிரியாணி கடை திறக்கப்பட்டது. அறிமுக நாள் சலுகையாக ஒரு பைசா, 5 பைசா, பத்து பைசா உள்ளிட்ட செல்லாத நாணயங்களை கொண்டு வந்தால் பிரியாணி இலவசம் என விளம்பரப்படுத்தப்பட்டது.
செல்லாத காசுகள் மக்களிடம் இல்லாமல் இருக்கலாம் என கடை நிர்வாகம் நினைத்ததோ என்னவோ இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் காலையிலேயே செல்லாத ஐந்து பைசா, பத்து பைசா காசுகளுடன் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த வரவேற்பை எதிர்பாராத பிரியாணி கடையினர் மக்கள் கூட்டத்தை கண்டதும் 50 பேருக்கு மட்டும் பிரியாணி டோக்கனை கொடுத்துவிட்டு என்ன செய்வது என்று தெரியாமல் கடையின் ஷட்டரை மூடிவிட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.