கோவை மாவட்டம் வால்பாறைக்கு அருகே உள்ளது சோலையார் எஸ்டேட். இப்பகுதிக்கு கூழாங்கல் ஆற்றில் இருந்து வரும் தண்ணீர் சுமார் 50 அடி உயரத்திலிருந்து தாழ்வாக செல்கிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த பிளம்பராக வேலை செய்து வந்த 21 வயதான சாகர் தனது காதலியுடன் இருசக்கர வாகனத்தில் வால்பாறையை சுற்றி பார்ப்பதற்காக வந்துள்ளார். வால்பாறையில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த இளம்ஜோடி, கடைசியாக தடை செய்யப்பட்டுள்ள சோலையார் எஸ்டேட் பகுதிக்குள் சென்றுள்ளனர். சாகரும் அவரது காதலியும் அங்குள்ள இயற்கை காட்சிகளை ரசித்துக்கொண்டே பிர்லா பால்ஸ் நீர்வீழ்ச்சிக்கு அருகே சென்றுள்ளனர். அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் சாகர் திடீரென தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது காதலி, சாகரை காப்பாற்ற முயற்சித்தபோது அவரும் தண்ணீரில் தவறி விழுந்துள்ளார்.
இருவரும் தண்ணீரில் தத்தளித்த நேரத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த இளம்பெண் மட்டும் 20 அடி தூரத்தில் கரை சேர்ந்தார். ஆனால், தண்ணீரில் மூழ்கிய சாகர் மாயமாகியுள்ளார். இந்த சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த தேயிலை தோட்டக் காவலர்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு ஸ்பாட்டுக்கு வந்த தீயணைப்புத் துறையினர் மாயமான சாகரை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆனால், கடந்த 2 நாட்களாக சாகரின் உடல் கிடைக்காத நிலையில் தீயணைப்புத் துறையினரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காதலியோடு சுற்றுலாவுக்கு வந்த இளைஞர் ஒருவர் திடீரென நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமான சம்பவம் வால்பாறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.