சேலத்திற்கு, அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக மாநகர காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார் (சூரமங்கலம்), ஷர்மிளா பானு (கொடுங்குற்றப்பிரிவு), எஸ்ஐ அங்கப்பன் (கருப்பூர்), ஏட்டு ராஜ்குமார் (நுண்ணறிவுப்பிரிவு) ஆகியோர் இன்று (ஆகஸ்ட் 11, 2018) அதிகாலை கருப்பூர் செக்போஸ்ட் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
செக்போஸ்ட் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தப்பட்டிருந்த மூன்று பொலிரோ பிக்அப் வாகனங்களை போலீசார் சோதனை செய்தனர். அந்த வாகனங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை போதைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது. ஒவ்வொரு வாகனத்தில் இருந்தும் தலா 50 மூட்டைகள் வீதம் மொத்தம் 150 மூட்டைகள் கைப்பற்றப்பட்டன. ஒவ்வொரு மூட்டையிலும் தலா 30 கிலோ போதைப்பொருள் பாக்கெட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 22.50 லட்சம்.
போதைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீசார், வாகனங்களை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் பழையூரைச் சேர்ந்த செல்வகுமார் (33), கெண்டையனஹள்ளியைச் சேர்ந்த சக்திவேல் (23), சேலம் குஞ்சு மாரியம்மன் கோயில் தெருவைத் சேர்ந்த கார்த்தி (25) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான டிரைவர்களிடம் விசாரணை நடத்தியதில், பிடிபட்ட போதைப் பொருள்கள் அனைத்தும் சேலம் பனங்காட்டைச் சேர்ந்த முனுசாமி மகன் மாதேஸ் (33) என்பவர் வாங்கி வரச்சொல்லியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் போலீசார் கைது செய்தனர்.
மாதேஸிடம் விசாரித்ததில், போதைப் பொருள்களை சேலம், மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்க திட்டமிட்டு இருந்ததும், இந்தப் பொருள்களை பெங்களூரில் இருந்து கொள்முதல் செய்திருப்பதும் தெரிய வந்தது. மேலும், மாதேஸ் மீது ஏற்கனவே கடந்த 22&3&2018ம் தேதி, இதேபோல் பெங்களூரில் இருந்து போதைப் பொருள்களை கடத்தி வந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்தார் என்பதும் தெரியவந்தது. கைதான நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில், அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.