" நீ அவனோட ஆதரவாளராக இருந்தால் என்ன.? அவனையே மானாமதுரையில் தோற்கடிப்பேன்." என சொந்தக்கட்சிக்காரனையே தோற்கடிப்பதாக, டி.டி.வி.அணியின் மா.செ.ஒருவர் சூளுரைக்கும் ஆடியோ ஒன்று வெளியாக டி.டி.வி.கூடாரமே கலகலத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தினைப் பொறுத்தவரை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மா.செயலாளராக இருப்பவர் முன்னாள் எம்.எல்.ஏ-வான கூத்தக்குடி உமாதேவன். அதே மாவட்டத்தில் அம்மா பேரவையின் மாநில செயலாளராக இருப்பவர் மானாமதுரை சட்டமன்றத்தொகுதியின் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-வான மாரியப்பன் கென்னடி. ஒருவருடைய விழாவினில் மற்றொருவர் பங்கெடுத்துக் கொள்வதில்லை அந்தளவிற்கு தொடக்கம் முதலே இருவருக்கும் ஏழாம் பொருத்தம். இது தெரிந்தவர்கள், "சிவகங்கை சுற்றுப்பயணம் வருகிறேன். அங்கு எவ்வித எடக்கு மடக்கும் கூடாது." என ஸ்டிரிக்டாக தலைமை கூறிவிட, இருதரப்பும் மதுரை பப்பீஸ் ஹோட்டலில் ஒன்று சேர்ந்து எப்படி வரவேற்பு கொடுப்பது..? என ஒப்புக்காக ஆலோசனை செய்தது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு டி.டி.வி. தினகரனும் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்து சென்ற நிலையில், கண்டரமாணிக்கம் ஊரிலுள்ள ஒருவரை, வறுத்தெடுக்கின்றார் மா.செ.உமாதேவன். விடாத அவரும் மீண்டும் மா.செ..உமா தேவனுக்கேப் போனைப் போட்டு மன்னிப்பு கேட்பதாக டயலாக் விட, எதிர் தரப்பிலுள்ள உமாதேவனும் ஓவராக சவுண்ட் விட்டது தான் சிவகங்கை மாவட்டத்தினை மட்டுமின்றி, ஒட்டுமொத்த டி.டி.வி.கூடாரத்தையே கலங்கடித்துள்ளது.
" உன்னை மாரியப்பன் கென்னடி அறிமுகப்படுத்தினான் என்பதற்காக இப்படி செய்யக்கூடாது. இதோப் பாரு.!!! மாரியப்பன் கென்னடி என்ன மாரியப்பன் கென்னடி.! அவனை மானாமதுரையிலேயே தோற்கடித்துவிடுவேன். சும்மா ஒன்னுமில்ல.! 40 வருஷ அரசியல் வாழ்க்கை இது.! நீ மஞ்ச குளிச்சுட்டுப் போறத பார்க்கவா இருக்கேன்..? மானாமதுரை மட்டுமல்ல திருப்புத்தூர், ஆலங்குடி என்னை எவன் எதிர்த்தாலும் அவனை தோற்கடிப்பேன்." என்கிறது மா.செ.உமாதேவனின் வாய்ஸ்.
என்ன தான் உட்பகை இருந்தாலும், அனைவரையும் அனைத்து செல்ல வேண்டிய மா.செ. சொந்தக்கட்சிக்காரனையே தேர்தலில் தோற்கடிப்பேன் என சூளுரைப்பது எந்த வகையில் நியாயம்..?என்கின்றனர் அ.ம.மு.கழகத்தினர்.! கேள்வி நியாயம் தானே..?