'மாண்டஸ்' புயல் கரையைக் கடந்ததைத் தொடர்ந்து 12, 13 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளுக்கும் மிதமான மழை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று 33 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு தொடர் நீர்வரத்தால் 22.25 அடியாக உயர்ந்துள்ளது. ஏரியின் மொத்தக் கொள்ளளவு 24 அடி என்பது குறிப்பிடத்தகுந்தது. வினாடிக்கு 2,046 கனஅடி நீர் வரும் நிலையில், இன்று காலை 100 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்ட நிலையில், திடீரென நீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரித்தது. இந்நிலையில், தற்போது நீர் திறப்பு 2000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பொழிந்து வரும் நிலையில், முன்னதாக காஞ்சிபுரம் தாலுகாவில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பள்ளி தலைமையாசிரியர்களே விடுமுறையை அறிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்திலும் கனமழை தொடர்வதால் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.