பண்டைய காலங்களில், பறையடித்தும், முரசு அடித்தும் தகவல்களைப் பரிமாறி வந்தனா். அதன்பிறகு, கல்வெட்டுகள், தோல், களிமண் மற்றும் பனை ஓலைகளில் எழுத்து வடிவமாகக் கொண்டுவந்தனா். பிற்காலங்களில் இதையெல்லாம் ஆவணப்படுத்துவதற்கு வசதியாகக் காகிதத்தைக் கண்டுபிடித்து அதில் இறகுகள் மூலம் எழுதினார்கள்.
இந்த நிலையில் தான் எழுத்தில் ஒரு புரட்சி உருவாகும் விதமாக அச்சு என்பது கண்டுபிடிக்கப்பட்டு மேலை நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த அச்சு வளா்ச்சி இந்தியாவில் பரவிய போது, அச்சில் கோர்த்து வெளியான முதல் எழுத்து, தமிழ் எழுத்து தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த அச்சு இயந்திரம், தென் திருவிதாங்கூா் சமஸ்தானத்தில் “லண்டன் மிஷனரி”யால் அறிமுகப்படுத்தப்பட்டது.
குமரி மாவட்டத்தை உள்ளடக்கிய அப்போதைய தென் திருவிதாங்கூரின் சி.எஸ்.ஐ திருச்சபையின் அப்போஸ்தலா் என்றழைக்கப்படும் அருட்திரு வில்லியம் தொபியாஸ் ரிங்கல் தௌபே, அருள் பணியாளராக 1806 ஏப்ரல் 25-ம் தேதி குமரி மாவட்டம் வந்தார். இங்கு மக்களின் அறியாமை இருள் அகல கல்வியையும் அருட்பணியோடு இணைத்துக் கொண்டார்.
அருட்பணிக்காகவும் மக்களின் கல்வியறிவுக்காகவும் கல்விக்கான பாடத்திட்டங்களை அச்சிட அச்சகத்தின் தேவையை லண்டன் அருள்பணி சங்கத்துக்கு எழுதினார். அதன்பிறகு, இவருக்கு அடுத்து 1817-ல் வந்த சார்லஸ் மீட் ஐயா் முயற்சிகள் மேற்கொண்டு, 1920-ல் தரங்கம்பாடியில் இருந்து அச்சு இயந்திரம் நாகா்கோவில் பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓரு சிறிய அறையில் நிர்மாணிக்கப்பட்டது.
பின்னா் 1821 ஏப்ரல் 1-ம் தேதி முதல் தென்திருவிதாங்கூரின் முதல் அச்சகம் “லண்டன் மிஷன் அச்சகம்” என்ற பெயரில் அச்சுப் பணிகளை தொடங்கியது. “ஆத்மபோதம்” எனும் நூல் முதலில் அச்சிடப்பட்டது. இதைத் தொடா்ந்து திருமறையின் பகுதிகள், மாத இதழ், துண்டுப் பிரசுரங்கள், பள்ளிக்கூடப் பாடபுத்தகங்கள் எனத் தமிழ், மலையாளம், ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டன. அச்சகத்துக்கான காகிதம், அச்சுகள், படத்தட்டைகள் லண்டனில் இருந்து தான் வந்தன.
அதன்பிறகு 1830-ல் நெய்யூா், 1831-ல் கொல்லம் ஆகிய இடங்களில் அச்சகம் விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவிலே சிறுவா்களுக்கான முதல் இதழ் ‘பாலதீபிகை’ இங்கு தான் அச்சிடப்பட்டது. இங்கு அச்சிடப்பட்டு 160 ஆண்டுகளாக தொடா்ந்து இப்போதும் வெளியாகிக் கொண்டிருக்கும் மாத இதழ் 'தேசோபகாரி' என்பது குறிப்பிடத்தக்கது. இப்படித் தோன்றிய திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் முதல் அச்சகத்துக்கு இன்றைக்கு வயது 200. இதைப் பெருமைப்படுத்தும் விதமாக தபால் துறையின் சார்பில் சிறப்புத் தபால் தலை வெளியிட்டு குமரி சி.எஸ்.ஐ பேராயத்தினா் கொண்டாடி வருகின்றனா்.