தொடர் மழையால் காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி பகுதியில் 200 ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பயிர்கள் அழுகியுள்ளது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோவில் வட்டத்திற்குட்பட்ட குமராட்சி அருகே உள்ள வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் கடந்த 20 நாட்களுக்கு முன் விவசாயிகள் 500 ஏக்கருக்கு மேல் சம்பா நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனர். இதில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் பெய்த தொடர் மழையாலும், வாண்டையார் இருப்பு, வெள்ளூர், வெச்சூர் பகுதியில் உள்ள ஊமையன் வாய்க்கால், நரிமோட்டு வாய்க்காலில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாலும் மேலும், அதனைத் தூர்வாராமல் புதர்மண்டிக் கிடப்பதால் மழைநீர் வடியாமல் கடந்த 3 நாட்களாக தேங்கி நிற்பதால் 200 ஏக்கருக்கு மேல் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அழுகியுள்ளது. இதில் சில விவசாயிகள் விளைநிலத்தில் தண்ணீர் விரைவில் வடிய வேண்டும் என்பதால் நீர் மோட்டார் பொருத்தி வயலில் தேங்கிய தண்ணீரை வடிய செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மழை அதிகமாக பெய்து தண்ணீர் வந்ததால் பயிர்களைக் காப்பாற்ற முடியாது எனக் கருதி வேதனையில் அப்படியே விட்டுவிட்டனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறையினர் மற்றும் வேளாண் அலுவலர்களிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதியில் விவசாயம் செய்யும் கோவிந்தசாமி மற்றும் செல்வராஜ் கூறுகையில், “இந்தப் பகுதியில் மழை பெய்து 3 மணி நேரத்தில் தண்ணீர் வடிந்துவிடும். தற்போது எப்போதும் இல்லாத அளவுக்குத் தண்ணீர் தேங்குவதற்கானக் காரணம் நரிமோட்டு வாய்க்கால் மற்றும் ஊமையன் வாய்க்கால், மேம்பாலத்து கன்னி ஆகிய வாய்க்கால்களில் தற்போது ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். வாய்க்காலைத் தூர்வாரவே இல்லை. இதனால் இந்தப் பகுதியில் தண்ணீர் வடிய மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் தான் 200 ஏக்கருக்கு மேல் நன்றாக வளர்ந்த நெற்பயிர்கள் மூழ்கி அழுகி விட்டது.
இந்த வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும் என்று பொதுப்பணித்துறையில் மனு அளித்தால், கடந்த 5 மாதத்திற்கு முன்பே தூர்வாரியாச்சு. அதற்கான தொகையையும் கொடுத்தாச்சு. இனிமேல் அடுத்த ஆண்டு தான் தூர்வார முடியும் என்கின்றனர். வாய்க்காலே இல்லாத இடத்தில் எப்படி தூர்வாரினார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாரிய வாய்க்காலைக் காணவில்லை என இந்தப் பகுதியில் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து காவல்நிலையத்தில் புகாரளிக்க உள்ளோம். தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதியானது தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான முட்டம் கிராமத்திற்கு அடுத்த கிராமம் ஆகும்.