Skip to main content

பாஜக சார்பில் இருசக்கர வாகன பேரணி; காவல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/08/2024 | Edited on 13/08/2024
2 wheeler rally on behalf of BJP The High Court ordered the police dept to respond

நாட்டின் 78வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி (15.08.2024) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாகச் சுதந்திர தினத்தன்று தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்தத்  திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனுமதி கோரி போலீசாரிடம் பாஜகவினர் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி மனு அளித்தனர்.

இதற்கு காவல் துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து பாஜக கோவை மாவட்டச் செயலாளர் கிருஷ்ண பிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு இன்று (13.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், “பேரணி நடத்தத் திட்டமிடப்பட்ட சில பகுதிகளில் குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றைக் காரணம் காட்டி இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “யார் வேண்டுமானாலும் தேசியக் கொடி ஏந்தி செல்லலாம். அவ்வாறு செல்லும்போது எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை போலீசார் அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் பேரணிக்கு முழுமையாக அனுமதி வழங்க முடியாது” எனத் தெரிவித்தார். மேலும் இவ்வழக்கு தொடர்பாகக் காவல் துறை உரிய பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை நாளைய (14.08.2024) தினத்திற்கு ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்