Skip to main content

கடலூரில் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 2 டன் மீன்கள் பறிமுதல்!

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

2 tonnes of fish caught using narrow mesh nets seized in Cuddalore!

 

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி கடலில் மீன்கள் பிடிப்பதால் சின்னஞ்சிறு மீன் குஞ்சுகள் முதல் பெரிய அளவிலான மீன்கள் வரை பிடிபடுகின்றன. இதனால் மீன்வளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதையடுத்து தமிழகம் முழுவதும் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு ஒரு தரப்பு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

அதையடுத்து அரசு சார்பில் அதிகாரிகள் மீனவர்கள் இடத்தில் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதை பிடிப்பதை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆனாலும் ஒரு சில மீனவர்கள் இந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். இதனால் கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் தினமும் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்தும், அந்த படங்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தை ரத்து செய்தும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நேற்று முன்தினம் கடலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்திய தேவனாம்பட்டினம், ராசாப்பேட்டை, அக்கரைகோரி மற்றும் சில மீனவ கிராமங்களைச் சேர்ந்த 5 மீனவர்களுக்கு அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடை மற்றும் குறைவு கால நிவாரணம், மீனவர் சேமிப்பு நிவாரணம், மீனவர் நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் நிவாரணம் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு நலத் திட்டங்களையும் நிரந்தரமாக ரத்து செய்து கடலூர் மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டார். மேலும் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்க துணைபுரிந்த ஆறு நாட்டு படகுகளின் பதிவை ரத்து செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குமுறை சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கும் படகுகளை கண்காணிக்கும் பொருட்டு கடலூர் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளின் தலைமையில், ஆய்வாளர்கள், மீன்வள மேற்பார்வையாளர்கள், கடல் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு காவலர்கள் ஆகியோர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நல்லவாடு பகுதியில் மீன்வளத் துறையில் பதிவு பெற்ற இரண்டு படகுகளில் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகள் மூலம் பிடிக்கப்பட்ட மீன்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த படகுகளளில் இருந்து சுமார் 2 டன் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மீன்களை அதிகாரிகள் 1,10,000 ரூபாய் பொது ஏலம் விடப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டது. மேலும் இரண்டு நாட்டு படகுகளுக்கு வழங்கப்படும் டீசல் மானியம் ரத்து செய்யப்பட்டதோடு படகுகளின் பதிவும் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 'இந்த தொடர் நடவடிக்கைகள் மேலும் தொடரும்' என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இதனிடையே சுருக்குமடி வலை விவகாரத்தில் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மராட்டியம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், புதுச்சேரி மாநில அரசு இது சம்பந்தமாக எந்தவித முடிவையும் அறிவிக்கவில்லை. இதனால் புதுச்சேரியை சேர்ந்த சில மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடித்து வருகின்றனர். புதுச்சரி அரியாங்குப்பத்திற்குட்பட்டட தவளகுப்பத்தின் கடல் பகுதி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி காலில் காவல் நிலையத்திற்கு உட்பட்டு வருகிறது. இங்குள்ள மீனவர்கள் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிப்பதாக  காவல் நிலையம் மற்றும் மீன்வளத் துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் காவல் தமிழக பகுதியில் விசாரணை நடத்தினர். 

 

அது போன்ற நிகழ்வு நடைபெறாததால் ஏமாற்றமடைந்த நிலையில் அருகே புதுச்சேரி பகுதியில் உள்ள மீன்பீடி தளத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்திய இரண்டு படகுகளையும் பறிமுதல் செய்வதாகவும் இல்லாவிட்டால் ஒரு படகிற்கு ஒரு லட்சம் வீதம் 2 படகுகளுக்கு 2 லட்சம் அபராதம் கட்ட வேண்டும் என மிரட்டியுள்ளனர். இதனால் தொழிலுக்கு செல்ல படகு வேண்டுமே என கருதி ஒரு படகுக்கு ரூபாய் 60 ஆயிரம் வீதம் இரண்டு படகுகளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் அபராதம் என வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தொகைக்கு அவர்களுக்கு எந்தவித ரசீதும் கொடுக்கப்படவில்லை. மேலும் இந்த வசூலில் ஈடுபட்டு காவலர்கள் அதிகாரிகளுக்கு என தலா 5 கிலோ மீன்கள் என சுமார் 70 கிலோ மீன்கள் இலவசமாக எடுத்துச் சென்றதாகவும் மீனவர்கள் கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்