
சேலத்தில் கொலை உள்ளிட்ட 18 வழக்குகளில் தொர்புடைய இரண்டு ரவுடிகளைக் காவல்துறையினர் துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். சேலம் சின்ன திருப்பதியைச் சேர்ந்தவர் சித்தேஸ்வரன் (38). இவர் மீது கொலை உட்பட 18 குற்ற வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. கடந்த 3 மாதமாக அவர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். அவரை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்நிலையில், சேலம் 4 சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் சித்தேஸ்வரன் பதுங்கி இருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் ஆய்வாளர் பொன்ராஜ் மற்றும் காவலர்கள், அந்த விடுதிக்கு விரைந்தனர். அங்கு ஓர் அறையில் தங்கியிருந்த சித்தேஸ்வரனை துப்பாக்கி முனையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்தச் சம்பவத்தின்போது சித்தேஸ்வரனுடன் இளம்பெண் ஒருவரும் இருந்தார். அவரிடம் விசாரித்தபோது, தான் ஒரு வழக்கறிஞர் என்றார். ஆனால், சித்தேஸ்வரனோ, அந்தப் பெண் தன்னுடைய இரண்டாவது மனைவி என்று பதில் அளித்தார். இதையடுத்து அந்தப் பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
அதே அறையில் விஜயன் என்கிற கண்ணாடி விஜயன் (35) என்பவரும் இருந்தார். விசாரணையில், அவர் சித்தேஸ்வரனின் கூட்டாளி என்பதும், அவர் மீது கொலை முயற்சி உட்பட 5 வழக்குகள் விசாரணையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கண்ணாடி விஜயனையும் காவல்துறையினர் கைது செய்தனர்.