கன்னியாகுமரி மாவட்டம், தேங்காப்பட்டணம் அருகே உள்ள ஆயன்விளையைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (39). தனியார் நிதி நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விபின் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் விபின், 2000 ரூபாய் பணத் தாள்களை கமிஷன் அடிப்படையில் மாற்றிக் கொடுப்பதாகக் கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீகுமார், தனது நண்பர்கள், உறவுக்காரர்கள் மூலமாக 80 லட்சம் ரூபாய்க்கு 500 ரூபாய் தாள்களை திரட்டினார். இதையடுத்து, தனது நண்பர்கள் இருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஸ்ரீகுமார், தர்மபுரி மாவட்டம் குண்டல்பட்டியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினார். பின்னர் அவர், குண்டல்பட்டியில் விபின் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு பணத்தை எடுத்துச்சென்று, அங்கு ஏற்கனவே வந்திருந்த விபினின் கூட்டாளிகளிடம் கொடுத்தார். பணத்தை வாங்கிக் கொண்ட அவர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் காரில் பறந்தனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் அங்கு வந்த சிலர், 2000 ரூபாய் தாள்கள் கொண்ட ஒரு கோடி ரூபாய் கொண்டு வந்திருப்பதாக ஸ்ரீகுமாரிடம் கூறியுள்ளனர். அப்போது அங்கு ஒரு காவல்துறை வாகனம் வந்து நின்றது. அந்த வாகனத்தில் இருந்து எஸ்.ஐ. ஒருவரும், காவலர் ஒருவரும் இறங்கி வந்தனர். இருவருமே காக்கி நிற சீருடையில் இருந்துள்ளனர்.
காவல்துறையினரைப் பார்த்ததும் மர்ம நபர்கள் ஒரு கோடி ரூபாயுடன் அவர்கள் வந்த காரிலேயே தப்பிச் சென்றனர். இதனால் குழம்பிப் போன ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய நண்பர்கள், உடனடியாக விபின் அனுப்பி வைத்ததாகச் சொல்லப்பட்ட நபர்களை அலைப்பேசி மூலம் தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர். ஆனால் அவர் அலைப்பேசியை எடுக்கவில்லை. பின்னர் விபினை தொடர்பு கொண்டு கேட்டபோது அவரும் முறையாக பதில் அளிக்கவில்லை.
இது ஒருபுறம் இருக்க, காவல்துறை வாகனத்தில் வந்தவர்களும் விபினின் கூட்டாளிகள் தான் என்பது தெரிய வந்தது. விபின் தரப்பு தன்னை திட்டமிட்டு ஏமாற்றி விட்டதாகக் கருதிய ஸ்ரீகுமார், இதுகுறித்து கிருஷ்ணாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல் ஆய்வாளர் ஷர்மிளா, இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
நிகழ்விடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், கேரளா மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சஜிர்கான் (34), ஜாகீர் அலி (33), கோழிக்கோட்டைச் சேர்ந்த அஷ்ரப் (51) ஆகிய மூன்று பேர்தான் ஸ்ரீகுமாரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 8 பேரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், எஸ்.ஐ., மற்றும் காவலர் வேடத்தில் வந்த இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை தேடி வருகின்றனர்.