![2 lakh votes should be bought Natham constituency alone elections says Minister sakkarapani](http://image.nakkheeran.in/cdn/farfuture/vV9AhEf53q2Px7SomgCisreuNhYwySVX6PMiM2f883Q/1701847053/sites/default/files/inline-images/993-ashok_244.jpg)
அடுத்தாண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக அரசு செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை எடுத்துக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் சாணார்பட்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி வரவேற்றார். எம்.பி.வேலுச்சாமி, முன்னாள் எம்எல்ஏ ஆண்டியம்பலம், மேற்கு மாவட்ட பொருளாளர் விஜயன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
கூட்டத்திற்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசும்போது, “கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். குறிப்பாக நத்தம் சட்ட மன்ற தொகுதியில் மட்டும் ஒரு லட்சத்து ஐயாயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றிருந்தார். இதற்கு நீங்கள் தான் காரணம். கடந்த முறை நாம் எதிர்க் கட்சியாக இருந்தோம். ஆனால் தற்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். தமிழ்நாடு முதல்வர் கடந்த 30 மாதங்களில் செயல்படுத்திய கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, கட்டணமில்லா டவுன்பஸ், பள்ளிகளில் காலை உணவு திட்டம், 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு, புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வீடு வீடாக சென்று எடுத்துக் கூறி வருகிற பாராளுமன்றத்தில் வாக்காளர் மக்களிடம் வாக்கு சேகரிக்க வேண்டும்.
நத்தம் சட்டமன்ற தொகுதியை பொருத்தவரை அரசு கல்லூரி, புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், அமராவதி, காவேரி, ஆற்றின் உபரி நீர்மூலம் குளங்களை நிரப்பும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. அதனால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் நத்தம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகளில் 2 லட்சம் வாக்குகள் திமுக பெற வேண்டும். இதற்கான பணியை உடனடியாக நீங்கள் தொடர வேண்டும்” என்று கூறினார்.