கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பயன் பெறும் வகையில் சிறப்பு மக்கள் குறைதீர்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன், சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இம்முகாமில் வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். பின்னர் பணியின்போது இறந்த வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பன்னீர்செல்வம், " தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதில் தீவிர நடவடிக்கைகள் எடுப்பதால் இந்த அரசின் செயல்பாடு மீது மக்கள் நம்பிக்கை வைத்து அதிகளவில் மனு அளிக்கின்றனர். தி.மு.க அரசு பொறுப்பேற்பதற்கு முன்பு நமது மாவட்டத்தில் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' நிகழ்ச்சி மூலம் வாங்கப்பட்ட 19,116 மனுக்களில் 8,953 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட 16,584 மனுக்களில் 16,472 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடலூர் மாவட்டத்தில் 2,75,683 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 2,53,305 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆகையால் விடுபட்ட மனுக்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். மேலும் இன்று மக்கள் வழங்கக் கூடிய அனைத்து மனுக்களும் உடனுக்குடன் விசாரணை நடத்தி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் நகராட்சி முழுவதும் கொசுத்தொல்லை, கடும் துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். ஆனால் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற உடன் கடலூர் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன்மூலம் கடலூர் மாநகராட்சி அழகுபடுத்தி, அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து தரப்படும். மேலும் பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ளதால், இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து முழுமையாக பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கடலூர் மாவட்டத்தை ஒமிக்ரான் தொற்று எட்டிப்பார்க்க உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. அதனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை" என கூறினார்.
இதேபோல் குறிஞ்சிப்பாடியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் குறைகளை தீர்க்க ஆர்வமுடன் மனுக்களை அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் நேரடியாக அளித்தனர். இம்முகாம்களில் கடலூர் மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, கடலூர் வட்டாட்சியர் பலராமன், குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் சையத் அபுதாகீர் உள்ளிட்ட அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.