உரிய விதிகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்ற தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்றுக்கொண்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தி கண்காணிக்க வேண்டுமென்று தி. மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை தினத்தன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சிசிடிவி கேமரா மூலம் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக உள்ளிட்ட அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது..
இந்த வழக்கு இன்று நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தபோது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.அல் சுந்தரேசன், தமிழ்நாடு பஞ்சாயத்து தேர்தல் சட்டம் 1995-ன் படி மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே அமலில் உள்ளதாகவும், மாநில தேர்தல் ஆணையம் சார்பில் சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அந்த விதிகளைப் பின்பற்றுமாறு விரிவான எழுத்துப்பூர்வ அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார். அந்த உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 315 மையங்களிலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டுமெனவும், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் இரண்டு சிசிடிவி கேமராக்கள் வைத்து அனைத்து நடவடிக்கைகளையும் பதிவு செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்தில் சம்பந்தப்பட்ட வேட்பாளரும் அவரின் முகவரும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்.
காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால், வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தி முடிக்க காவல்துறை முழுவீச்சில் பணியாற்றி வருவதாகவும், அனைத்தும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர் வழக்கறிஞர் நர்மதா சம்பத், இந்தியா முழுக்க பின்பற்றப்படும் தேர்தல் நடைமுறையே, உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும் பின்பற்றப்படவுள்ளதாகவும், மனுதாரரின் கோரிக்கை ஏற்கனவே அமலில் உள்ள தேர்தல் விதிதானே தவிர அதில் புதிதாக ஏதும் இல்லை என வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம், காவல் துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பு விளக்கத்தில் திருப்தி அடைவதாக தெரிவித்த நீதிபதி, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.