Skip to main content

சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு-ஐகோர்ட் உத்தரவு

Published on 20/07/2018 | Edited on 20/07/2018
cb

 

தமிழகத்தில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகள் தமிழக அரசிடம் இருந்து அங்கீகார சான்றிதழ் பெற வேண்டும் என்று தமிழக அரசு  கடந்த மார்ச் 2ம்தேதி அரசாணை வெளியிட்டது.

 

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் 18 வதுபிரிவின் கீழ் இந்த அரசாணையானது பிறப்பிக்கப்பட்டது. அங்கீகார சான்றிதழ் பெற இயலாத பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும் அங்கீகார சான்றிதழ் பெறமால் பள்ளிகள் இயங்கும் பட்சத்தில் நாளொன்றுக்கு10, 000 வரை அபராதம் விதிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டிருந்தது. 

 

சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி மகாதேவன் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தார்.

 

இந்த தடை உத்தரவை நீக்குமாறு தமிழக கல்வித்துறை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி,நீதிபதி பிடி.ஆஷா முதன்மை அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

இந்த வழக்கு விசாரணையின்போது தடை விதிக்கப்பட்டுள்ளதால் சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யமுடியவில்லை என்றும் ஆவணங்களை கேட்டு பெற முடியவில்லை என்றும் அரசு தரப்பில்  தெரிவிக்கப்பட்டது.

கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தின் கீழ் மாநில அரசுகளிடம் அங்கீகாரம் பெறவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

சிபிஎஸ்இ பள்ளிகள் சார்பில் ஏற்கனவே சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு கட்டணம் நிர்ணயம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பொருத்தமான அதிகாரம் யாருக்கு என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

 

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிபிஎஸ்இ பள்ளிகளை ஆய்வு செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என்று உத்தரவிட்டுள்ளனர்.


மேலும் சிபிஎஸ்சி பாடத்திட்ட விவகாரத்திலும் கட்டண நிர்ணய பிரச்சனை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தமிழக அரசு தலையிடாது என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.
 

சார்ந்த செய்திகள்