மேட்டூர் அருகே பிரபல ரவுடி கொலை வழக்கில் இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைதானவர்களில் ஒருவரின் அண்ணனின் கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடியை கொலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடலைச் சேர்ந்தவர் கதிர்வேல். இவருடைய மகன் சிபி (25). பிரபல ரவுடியான இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் 28ம் தேதி இரவு, புது சாம்பள்ளி குருவக்காடு அருகே வைத்து ஒரு கும்பல் சிபியை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. இதுகுறித்து கருமலைக்கூடல் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருமலைக்கூடலைச் சேர்ந்த சூர்யா (24), ரவிச்சந்திரன் (27) ஆகிய இருவருக்கும் சிபி கொலையில் தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். அதன்பேரில் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி, கருமலைக்கூடல் மாரியம்மன் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட கோஷ்டி தகராறில் கருமலைக்கூடலைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் சிபி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். கடந்த 20 நாள்களுக்கு முன்புதான் சிபி, சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்தார். ராஜேஷின் கொலைக்கு பழி வாங்கியே ஆக வேண்டும் என்று அவருடைய தம்பி சூர்யா துடித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் சிறையில் இருந்து சிபி வெளியே வந்ததால் அவரை தீர்த்துக்கட்ட முடிவெடுத்தார்.
இதையடுத்து மேட்டூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மூலம் சிபியை புது சாம்பள்ளி குருவக்காடு பகுதிக்கு மது அருந்தலாம் என்று கூறி வரவழைத்துள்ளார். ரவிச்சந்திரனும் சிபியும் நண்பர்கள் என்பதால் அவருடைய அழைப்பை நம்பி சிபி தனியாக அங்கு வந்துள்ளார். அங்கு வந்த சிபியை சூர்யாவும், ரவிச்சந்திரனும் வீச்சரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். கொலைக்குப் பயன்படுத்திய வீச்சரிவாளை அதே பகுதியில் குழி தோண்டி புதைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சூர்யா, ரவிச்சந்திரன் ஆகிய இருவரையும் மேட்டூர் காவல்துறையினர் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வீச்சரிவாள், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட இருவரையும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்களைத் தர்மபுரி மாவட்ட சிறையில் அடைத்தனர்.