எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு அளித்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் கடந்த 18.9.2017 அன்று உத்தரவிட்டார். இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஐகோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்துவது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடக்கூடாது என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பும் நடத்தக்கூடாது என்றும் 20.9.2017 அன்று உத்தரவிட்டார்.
பின்னர், அந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் தலைமையிலான முதன்மை அமர்வுக் மாற்றப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று மதியம் 1.40 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அப்போது, 18 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார். அதேசமயம் தகுதிநீக்கம் செல்லாது என நீதிபதி சுந்தர் தீர்ப்பு கூறினார்.
இதனையடுத்து வழக்கு மற்றொரு நீதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி விரைவில் நியமனம் செய்யப்படுவார் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறிஉள்ளார். தகுதி நீக்க வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதி யார்? என்பதை நீதிபதி குலுவாடி ரமேஷ் அறிவிக்கிறார். தலைமை நீதிபதிக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதி குலுவாடி ரமேஷ் 3 ஆவது நீதிபதியை அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.