கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள அம்மாபேட்டை ஊரைச் சேர்ந்தவர் பாலாஜி(49). கூலி தொழிலாளியான இவர், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் வயலுக்கு வேலைக்கு சென்றுள்ளார். பாலாஜி வேலை செய்துகொண்டிருந்த அந்தப் பகுதியில் 17 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார்.
சிறுமி தனிமையில் இருப்பதை அறிந்த பாலாஜி அந்த சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அவரின் பிடியில் இருந்து சிறுமி போராடி தப்பிச் சென்று தனது பெற்றோரிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார். அவர்களின் துணையோடு கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்தச் சிறுமி புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் பாலாஜியை கைது செய்தனர். இது சம்பந்தமான வழக்கு, விழுப்புரம் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சாட்சியங்கள் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி முத்துக்குமார் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்தார்.
அதில் குற்றவாளி பாலாஜிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். இந்த தொகையை கட்டத்தவறினால் மேலும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். தண்டனை கிடைக்கப்பெற்ற பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்போடு கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அடைக்கப்பட்டார்.