கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது நன்னாவரம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள் அதே பகுதியில் உள்ள ஒருவருடைய விவசாய நிலத்தில் நெற்பயிருக்கு களை எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மதிய நேரம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்குத் தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. அப்போது பம்புசெட் மூலம் விவசாய நிலத்தின் வழியாக வாய்க்காலில் ஓடி வெளியேறிய தண்ணீரைக் குடித்துள்ளனர். அந்த தண்ணீரில் நெல் பயிருக்குத் தெளிக்கும் யூரியா தெளிக்கப்பட்டது தெரியாமல் சுமார் 17 பெண்கள் அந்த தண்ணீரைக் குடித்துள்ளனர்.
இதனால் அவர்களுக்குத் திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள், அக்கம்பக்கம் வயலில் வேலை செய்தவர்களிடம் கூறியுள்ளனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மயக்கமடைந்த கன்னியம்மாள், இந்திரா, செல்வி, சுகுணா, சசிதா, ராணி, செல்வி அன்னபூரணி, சின்னப்பொண்ணு, செல்வநாயகி, கிருஷ்ணவேணி, சுந்தரி, சின்னக்கண்ணு, லட்சுமி, தேசிகா, ரம்யா, வளர்மதி உட்பட மயக்கத்தில் பாதிக்கப்பட்ட 17 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். விவசாய பணியில் ஈடுபட்ட 17 பெண்கள், விளைநிலத்தில் நிலத்தின் வழியாக வரும் யூரியா தெளிக்கப்பட்ட தண்ணீரைக் குடித்து மயக்கமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.