புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அம்புக்கோயில் முக்கம் கடைவீதியில் வியாழக்கிழமை(8.2.2024) மாலை வெறி நாய் ஒன்று கடைவீதிக்கு வந்தவர்களை கால்களில் கடித்து குதறியது. நாய் கடித்ததும் ரத்தம் கொட்ட கொட்ட கதறிக் கொண்டு அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதனையடுத்து சற்று நேரத்திற்குள் தென்நகர் பகுதியில் ஒரு நாய் இதே போல அடுத்தடுத்து பலரை கடித்துவிட்டுச் சென்றுள்ளது. இதனால் கறம்பக்குடி பகுதியே பரபரப்பாகவும் பதைபதைப்பாகவும் இருந்தது.
இதில் கறம்பக்குடி இந்திரா நகர் பார்த்திபன் (35), புதுப்பட்டி சரவணகுமார் (41), மாரிமுத்து (44), தட்டாவூரணி கௌரி (25), பேராவூரணி கறம்பக்காடு ஓமவயல் சூரியமூர்த்தி (70), வெட்டன்விடுதி வினோத்குமார் (30), ஆலங்குடி லோகநாதன் (47), அங்கன்வாடி சுபாஷ் (15), தென்நகர் அம்பிகா (31), சின்னையன் (63), விஜயராமன் (68), சுக்கிரன்விடுதி சுரேஷ்குமார் (45) உள்பட 17 பேர் காயமடைந்து கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று காயங்களுக்கும் மருந்துகள் கட்டிய பிறகு 12 பேரை மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிலர் தடுப்பூசிகள் மட்டும் போட்டுக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர். ஒரே நேரத்தில் ஒரே ஊரில் 17 பேரை நாய்கள் கடித்த சம்பவம் வேதனையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இத்தனை பேரை நாய்கள் கடித்ததால் பொதுமக்கள் கடைவீதிக்கு வரவே பீதியடைந்துள்ளனர்.
இதே போல கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் இனாம் கிராமத்தில் ஞானசேகரன் என்ற விவசாயி தனது தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விடப்பட்டிருந்த 4 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கூட்டமாக வந்து கடித்துக் குதறி கொன்று போட்டதைப் பார்த்து விவசாயி கதறி அழுதார்.
தொடர்ந்து நாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து ஏராளமான விபத்துகளுக்கு காரணமாவதுடன் கால்நடைகளையும் கடித்துக் கொன்றுவிடுகிறது. மேலும் கறம்பக்குடி போல மனிதர்களையும் கடித்துக் குதறி வருகிறது.