தமிழகம் முழுவதிலும் ஜாக்டோ – ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரிய, ஆசிரிகைள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் மேற் கொண்டுள்ளனர். ஆசிரியர்களின்றி பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. வருவாய்துறை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்திலும் போராட்டங்கள் தொடர்கின்றன.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அளித்த பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ – ஜியோ அமைப்பின் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகும் பணிக்குத் திரும்பாவிட்டால் 17 பி. சார்ஜ் மெமோ அளிக்கப்படும். தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அரசு எடுக்கும் முடிவுகள் செயல்படுத்தப்படும். நேற்று முன் தினம் வரை 205 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதற்குரிய தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக 2000க்கும் அதிகமானோர் கல்வித்துறையில் விண்ணப்பம் செய்துள்ளனர். ஸ்டெர்லைட் தொடர்பான பிரச்சினையில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் தேவைப்படும் பட்சத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார்.
இதனிடையே இன்று நெல்லை மாநகரம், மற்றும் ஊரகப்பகுதிகளிலுள்ள பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டு ஆசிரிய ஆசிரியைகள் பணிக்குத்திரும்பியுள்ளனர். 90க்கும் மேற்பட்ட சதவிகிதம் பணிக்குத் திரும்பி விட்டனர். ஓரிரு நாட்களுக்குள் நிலை சீராகிவிடும் என்கிறார்கள் மாவட்ட அரசு வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள். அதேசமயம் நெல்லையில் தாலுகா அலுவலகம் முன்பாக கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.