துணை முதல்வர் ஓபிஎஸ் சின் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் மூடப்படாமல் மொத்தம் 169 ஆழ்துளைக் கிணறுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவை அனைத்தும் கிராம பகுதிகளில் உள்ள ஊராட்சிகளுக்குச் சொந்தமானது என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே இருக்கும் நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும் எத்தனை ஆழ்துளை கிணறுகள் கைவிடப்பட்டு மூடப்படாமல் இருக்கின்றன என கணக்கெடுக்கும் படி, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் தான் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ்வும் தேனி மாவட்டத்தில் எத்தனை ஆழ்துளை கிணறுகள் உள்ளன அவற்றில் எத்தனை கைவிடப்பட்டு மூடப்படாமல் உள்ளன என்ற கணக்கெடுக்கும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி கடந்த சில தினங்களாக மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் தேனி மாவட்டம் முழுவதும் மொத்தம் 169 ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் இருப்பது தெரியவந்துள்ளது. இவை அனைத்தும் ஊராட்சி நிர்வாகத்தால் போடப்பட்ட ஆழ்துளை கிணறுகள் என்றும் இவை அனைத்தும் சுகாதார வளாகங்கள், குடியிருப்புகள் என பொது இடங்களில் தான் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இது சம்பந்தமாக தேனி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஒரு அதிகாரியிடம் கேட்டபோது "தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளில் குடிநீர் தேவைக்காக மொத்தம் ஆயிரத்து 987 ஆழ்துளைக் கிணறுகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரத்து 529 ஆழ்துளைக் கிணறுகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. மீதமுள்ள 458 ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீர் இல்லாதாதால் அவற்றை கைவிட்டுள்ளது ஊராட்சி நிர்வாகம். அதில், 289 ஆழ்துளை கிணறுகள் மட்டுமே முறையாக மூடி போட்டு மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 169 ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருக்கிறது. அந்த விபரங்களை கலெக்டருக்கு தெரியப்படுத்தி இருக்கிறோம் கலெக்டரின் உத்தரவை வந்தபிறகு அந்த மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் மூடப்படும்" என்று கூறினார்.
இப்படி துணை முதல்வர் ஓபிஎஸ் சின் சொந்த மாவட்டத்திலையே இருக்கும் மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் அதிரடி நடவடிக்கை எடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்