உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாகப் பரவி வருகிறது, மத்திய மாநில அரசுகள் கரோனாவுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருவண்ணாமலை நகராட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்கள் நகரம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தீவிரமாகச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். பேருந்து நிலையம், சாலைகள், மார்க்கெட் பகுதிகள் போன்றவற்றிலும், அரசு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பது என சுமார் 50க்கும் மேற்பட்ட நகரத் தூய்மை பணியாளர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
![thiruvannamalai](http://image.nakkheeran.in/cdn/farfuture/kD66qvQWK-EL9Sr-UiZ71JKXA-4iR6yGaX9zCZmt57A/1585240469/sites/default/files/inline-images/vasa.jpg)
இதேபோல் கிரிவலப்பாதை அத்தியந்தல், ஆனாய்பிறந்தான், கோசாலை, அடி அண்ணாமலை, வேங்கிக்கால் ஊராட்சிகளைச் சேர்ந்த மகாத்மாகாந்தி ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் தொழிலாளர்கள் திருவண்ணாமலையில் தூய்மை படுத்தும் பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
இப்படி தூய்மை படுத்தும் பணியில் உள்ளவர்களுக்கு கை, கால்களுக்கு உரை, முகத்துக்கு மாஸ் போன்ற அடிப்படையானவற்றைக் கூட அதிகாரிகள் வழங்காமல் அவர்களிடம் வேலை வாங்குகிறார்கள். நகர பகுதிகளில் ஒரே மாஸ்கை 3 நாட்களாக பணியாளர்கள்பயன்படுத்திவருகிறார்கள். கிராமபுறத்தில் தூய்மை பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு அதைக்கூட ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் வழங்கவில்லை.
ஏன் மாஸ்க் போடவில்லை என்று பணியாளர்களிடம் கேட்ட போது, கொடுத்தால் தானே போட முடியும் என்கிறார்கள் அந்த அப்பாவிகள். இதைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் கேட்டபோது, "இருந்ததை ஓரளவு தந்து சமாளித்தோம். இப்போது தருவதற்கு ஒன்றுமில்லை. அரசாங்கம் எங்களுக்கு வழங்கினால் தானே நாங்கள் பணியாளர்களுக்குத் தர முடியும். வெளியில் வாங்கிக்கொள்ள சொல்கிறார்கள். எந்த மருந்துக்கடையில் கிடைக்கிறது. எங்கேயாவது கிடைத்தால் அதுவும் 5 ரூபாய் மாஸ்க் 50 ரூபாய் என விலை வைத்து விற்கிறார்கள். என்ன செய்வது, உயர் அதிகாரிகளுக்குத் தகவல் சொன்னாலும் எதுவும் நடப்பதில்லை" என்கிறார்கள்.