சென்னையிலிருந்து தஞ்சை வழியாக தினமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அந்த சிறப்பு ரயிலானது இன்று (09.09.2021) திருச்சிக்கு வந்து சேர்ந்த நிலையில், ரயில்வே பாதுகாப்பு படையினர் மூலம் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. அப்போது சென்னையைச் சேர்ந்த ஜிஜேந்திர குமார் (27), மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த டிலான் தாஸ் பாகல் (32) என்ற இரண்டு பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அவர்களின் உடைமைகளில் இருந்த நகைகளைப் பார்த்த அதிகாரிகள், இரண்டு பயணிகளிடமும் விசாரணை நடத்தினார்கள். அதில், நகைகள் ரமேஷ்குமார் என்ற நகை வியாபாரிக்கு சொந்தமானது என்று தொியவந்தது. ஆனால் அந்த தங்க நகைகளுக்கு உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததால் மயிலாடுதுறை விற்பனை வரித்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. விற்பனை வரித்துறையினர் மதிப்பீடு செய்ததில் 1,616.12 கிராம் எடை கொண்டது என்றும், 75 லட்சத்து 14 ஆயிரத்து 149 ருபாய் மதிப்பிலானவை என்றும் தெரிவித்துள்ளனர். திருச்சிக்கு வந்த சிறப்பு ரயிலில் 1.6 கிலோ தங்கம் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.