சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மாதநாயக்கன்பட்டியில் பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப் பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றம் தலைவராகத் தலைமை ஆசிரியர் சந்திரசேகரன், பொறுப்பு ஆசிரியராக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் படி தொன்மைப் பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள், மாணவர்களுடன் களப் பயணம் சென்று பார்த்தபோது அது 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சன்னியாசி கல் அல்லது கோமாரி கல் என்பது தெரிய வந்தது.
இது குறித்து ஆய்வு செய்த தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாளர்களான ஆசிரியர்கள் கூறும்போது, "மருத்துவ வசதி இல்லாத காலத்தில் தமிழகத்தில் நாட்டு மருத்துவம் மற்றும் மூலிகைகள் நோய்களைத் தீர்க்கப் பயன்பட்டன. மனிதனுக்கும் , விலங்குகளுக்கும் இம்முறையிலே நோய்கள் தீர்க்கப்பட்டன. மேலும் வழிபாட்டு முறைகளும் நோய் தீர்க்க பயன்படுத்தப்பட்டன.
மாதநாயக்கன்பட்டி அருகில் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கருப்புசாமி கோவில் அருகே கிடப்பதும் சன்னியாசி கல் எனப்படும் கோமாரிக் கல் என்பது உறுதியாகிறது. இந்தக் கல்லில் முக்கோண வடிவில் மலை முகடுகள், பசு மாடு போன்ற அமைப்பு வரையப்பட்டுள்ளது. அதன் அருகில் உள்ள கல்லில் கிரந்த எழுத்துக்களில் ப்ர, பூ என்றும் பசு மாடு அருகில் சுப என்றும், அதனைச் சுற்றி நான்கு புறமும் சூலமும் போடப்பட்டுள்ளது. அதில் தூஞ்ச என்று எழுதியுள்ளது. ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சன்னியாசி கல் கால்நடைகளுக்கு உடல் நலமில்லாதபோது இந்த கல்லின் அருகே கூட்டி வந்து இந்த கல்லை சுற்றி வந்து மூலிகைகளை கொடுத்து அல்லது அபிஷேகம் செய்தோ கால்நடைகளின் நோயை குணமாக்கியுள்ளனர்.
கோமாரி நோய் கால்நடைகளுக்கு அதிகமாக வந்தபோது இந்த வழக்கம் கிராமங்களில் இருந்துள்ளது. அதனால் இக்கல் சன்னியாசி கல், கோமாரிக் கல், மந்திரக் கல் என்று அழைக்கப்படுகிறது. இது 600 ஆண்டுகள் பழமையான கல் ஆகும். இது கோவில் புனரமைக்கும் போது கடக்கால் குழியில் இருந்துள்ளது. அதனைப் பார்க்கும் போது ஏதோ எழுதி உள்ளது என்று வெளியில் எடுத்துப் போட்டுள்ளனர். எங்கள் பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் சென்று ஆய்வு செய்து பார்த்தோம். மேலும் இதனைப் பற்றிய தகவலுக்கு சென்னையில் உள்ள தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர் சு. ராஜகோபால் அவர்களிடம் அனுப்பி உறுதி செய்தோம்." என்றனர்.