பொங்கல் பண்டிகையையொட்டி வடமாவட்டங்களில் எருதுவிடும் விழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் எருது விடும் விழா வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பனமடங்கி கிராமத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்தும் என சுமார் 141 காளைகள் பங்கேற்று ஓடின. இதில் குறைந்த நேரத்தில் பந்தய தூரத்தை கடக்கும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக 75 ஆயிரம் உட்பட மொத்தம் 40 பரிசுகள் வழங்கப்பட்டது. எருது விடும் விழாவை காண ஆயிரக்கணக்கான ரசிகள் பங்கேற்று கண்டு களித்தனர். இதில் மாடுகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறு சிறு காயங்கள் ஏற்பட்டது.
எருதுவிடும் விழா நடத்த விழா குழுவினர் உரிய காப்பீடு எடுத்திருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் விதிமுறை வகுத்துள்ள நிலையில் இந்த ஆண்டு காப்பீட்டு தொகை மிக அதிகமாக இருப்பதாகவும் அதைக் குறைக்க வலியுறுத்திய நிலையில் காப்பீட்டு தொகை குறைக்கப்படாததால் பனமடங்கி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவுக்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில் இன்று அனுமதியின்றி விழா நடத்தப்பட்டது.