காய்கறி, பழங்கள், பூக்கள் என அனைத்தும் மொத்த விற்பனை செய்யும் இடமான சென்னை கோயம்பேட்டில், தடைசெய்யப்பட்ட முறைப்படி வாழைப்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது தொடர்பாக 14 டன் வாழைப்பழங்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வாழைப்பழங்கள் மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில் இன்று (06.02.2021) காலை சென்னை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். வாழைப்பழங்கள் எத்திலீன் ஸ்பிரே மூலம் பழுக்க வைக்கப்படுகிறது என்ற புகாரை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது. எத்திலீன் ஸ்ப்ரே மூலம் வாழைப்பழங்களைப் பழுக்க வைப்பது புற்றுநோய் போன்ற உயிக்கொல்லி நோயை ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் மோசமானது என்ற ஆய்வறிக்கைகள் ஏற்கனவே இருக்கும் நிலையில், இப்படி சட்டவிரோதமாக எத்திலீன் ஸ்ப்ரே பயன்படுத்தி துரிதமாக வாழைப்பழங்களைப் பழுக்க செய்த கடை உரிமையாளர்களுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் அளித்தனர்.
மேலும் எத்திலீன் ஸ்ப்ரே மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 1.5 லட்சம் ரூபாய் மதிப்புடைய 14 டன் வாழைப்பழங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாழைப்பழங்களை அழிப்பதற்கான முயற்சிகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.