ஒரே நாளில் (அக்டோபர் 17) சிவகாசி வட்டத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர். சிவகாசி வட்டம் – மங்களம் அருகிலுள்ள ரெங்கபாளையத்தில் கனிஷ்கர் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. அந்த பட்டாசு நிறுவனம், பட்டாசு ஆலையின் நுழைவாயிலிலேயே பட்டாசு கடை நடத்தி வருகிறது. இன்றைய தினம் (அக்டோபர் 17) அந்த பட்டாசு கடையில் பட்டாசு வாங்கிய வாடிக்கையாளர் ஒருவர் முன்பாக சாம்பிள் வெடித்து காண்பிக்கப்பட்டுள்ளது. அப்போது கிளம்பிய தீப்பொறியால் பட்டாசுகள் வெடித்ததன் மூலம், பட்டாசு ஆலை குடோன் மற்றும் உற்பத்தி அறைக்குள் தீ பரவி வெடித்துச் சிதறியதில், பயங்கர வெடி விபத்து ஏற்பட்டு பட்டாசு உற்பத்தி நடந்துகொண்டிருந்த அறைகளிலும் அடுத்தடுத்து பரவியதால், விபத்தில் தொழிலாளர்களும் சிக்கினார்கள்.
ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறியதால், தீயணைப்புத்துறையினர் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்பட்டது. இவ்விபத்தில் 9 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உடல் கருகி உயிரிழந்தனர். நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகே கருகிய உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவர்கள் விபரம் தெரியவந்துள்ளது. அழகாபுரி மற்றும் லட்சுமியாபுரத்தைச் சேர்ந்த 1. பஞ்சவர்ணம் (வயது 35), 2.மகாதேவி (வயது 50), 3.தமிழ்ச்செல்வி (வயது 55), 4.முனீஸ்வரி (வயது 32), 5.தங்கமலை (வயது 33) 6.அனிதா (வயது 40), 7.குருவம்மாள் (வயது 55), 8.பாக்கியம் (வயது 35), 9.பாலமுருகன் (வயது 30), 10.இந்திரா (வயது 45) ஆகிய 10 பேர் ஆவர். மேலும், படுகாயமடைந்த பொன்னுத்தாய், சின்னத்தாய் ஆகிய இருவரும் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். எஸ்பி சீனிவாச பெருமாள் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.
இதே நாளில் (அக்டோபர் 17), சிவகாசி அருகிலுள்ள கிச்சநாயக்கன்பட்டியில் முத்து விஜயன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை வெடி விபத்தில் வேம்பு என்ற தொழிலாளி பலியானார். ஒரே நாளில் இரண்டு பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்தது விருதுநகர் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் ரெங்காபாளையத்தில் மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.