13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்த அறிக்கை தாக்கல் செய்யாத 13 மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இயற்கை வள முன்னேற்றம் மற்றும் பெரும்பள்ள ஒடை பாதுகாப்பு நல சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஈரோடு மாவட்டம், கதிரம்பட்டி கிராமத்தில் உள்ள பெரும்பள்ள ஓடை மாசு அடைந்து வருகின்றது. இதனை தடுக்கவும் அந்த நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். மேலும் ஓடை போன்ற நீர் நிலைகள், விவசாய நிலங்களின் பாசனத்துக்கு நீர் ஆதாரமாக இருக்கின்றது.
எனவே பெரும்பள்ள ஓடையில் ஆக்கிரமிப்பு செய்து தடுப்பு ஏற்படுத்தியதால் ஓடையில் தண்ணீர் போக்கு தடைபடுகிறது, இதனால் நீர்நிலைகள் தண்ணீர் தேக்கமுடியவில்லை. இதன் காரணமாக இப்பகுதியில் விளைநிலங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி மிகவும் பாதிக்கபட்டுள்ளது. மேலும் மழை காலத்தில் இந்த ஓடையை சுற்றியுள்ள விளைநிலங்கள் வெள்ளப்பெருக்கால் பாதிக்கபடுகிறது.
இந்த ஓடை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, பெரும்பள்ள ஓடையை தூர்வாரி மீட்க மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரித்த நீதிமன்றம் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் எந்தவிதத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசு அனுமதிக்கக்கூடாது என்று கடந்த 2015ம் ஆண்டு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளகயும் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது. மேலும் இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது 19 மாவட்ட ஆட்சியர்கள் நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தனர். ஆனால் 13 மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யவில்லை. இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அது தொடர்பாக ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கவும் சற்று காலம் தேவைப்படும். ஆனால் இந்த வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது, மேலும் நீதிமன்றம் தொடந்து உத்தரவுகள் பிறப்பித்தும் ஆக்கிரமிப்பு அகற்றிது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யாததால், வரும் 21ம் தேதி இந்த 13 மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
சி.ஜீவா பாரதி