தொழில்நுட்ப கோளாறு காரணமாக எச்.டி.எஃப்.சி வங்கி கிளையில் 100 பேர்களுடைய வங்கி கணக்குகளுக்கு பணம் கிரெடிட் ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தியாகராயநகரில் எச்.டி.எஃப்.சி வங்கியினுடைய கிளை ஒன்று உள்ளது. அக்கிளையில் 100 வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் 13 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. உடனடியாக வங்கி அதிகாரிகள் அந்த வங்கி கணக்குகளை எல்லாம் முடக்கியதாகக் கூறப்படுகிறது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த பணப் பரிமாற்றம் நடைபெற்றதா? அல்லது வெளியே இருக்கக்கூடிய நபர்களால் வங்கி ஹேக் செய்யப்பட்டு அதன் மூலம் இந்த பணப் பரிவர்த்தனை நடைபெற்றதா? என்ற கேள்விகள் எழுந்தது. அதேபோல் குறிப்பிட்ட அந்த நூறு வங்கி கணக்குகள் யாருடையது, அவர்களுக்குள் ஏதேனும் ஒற்றுமை இருக்கிறதா? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக வங்கி அதிகாரிகள் தரப்பில் சாப்ட்வேர் அப்டேட் செய்யும்போது 100 பேர் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டதாகத் தவறுதலாக குறுஞ்செய்தி சென்றது. வாடிக்கையாளர்களுக்கு தவறுதலாக குறுஞ்செய்தி சென்றதே தவிர வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் பணத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், யாரும் குழப்பம் அடைய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.