தமிழக மின்சார வாரியத்தில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பதற்காக டெல்லி சென்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ஒன்றிய அரசின் அமைச்சர் ஆர்.கே.சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த சந்திப்பின் போது, தமிழக மின்வாரியத்தின் சேர்மன் ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ். மற்றும் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழக இயக்குநர் சிவலிங்கராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
மத்திய அமைச்சருடனான அந்த சந்திப்பில் 12 அம்ச கோரிக்கைகளை மின்னிறுத்தி அதற்கு தீர்வு காணுமாறு ஆர்.கே.சிங்கை வலியுறுத்தியிருக்கிறார் செந்தில்பாலாஜி. குறிப்பாக, 2003 ஆண்டில் கொண்டுவரப்பட்ட மின்சார சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்திற்கு 237.63 லட்சம் டன் நிலக்கரியை ஒன்றிய அரசு அனுப்ப வேண்டிய நிலையில், வருசத்துக்கு வெறும் 171 .10 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே வழங்கப்படுகிறது. அதனால், உரிய அளவில் மின்சாரத்தை பெறும் வகையில், நாளொன்றுக்கு 10,000 டன் நிலக்கரியை வழங்க வேண்டும்.
ஒரிசா மாநிலம், சந்திரபிலாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழகத்திற்கு நிலக்கரி ஒதுக்கீடு செய்ய 30.03.2016-ல் ஒப்பந்தம் போடப்பட்டும், 5 ஆண்டுகள் கடந்தும் அங்கு நிலக்கரி உற்பத்தி துவக்கப்படாததால் அந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும். ஒன்றிய அரசின் நிதி நிறுவனங்களான பிஎஃப்சி, ஆர்இசி, ஐஆர்இடிஏ ஆகியவையிலிருந்து பெறப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 9.50 முதல் 12.65 சதவீதமாக இருப்பதை ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் அனைத்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை 8.50 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆர்.ஏ.பி.டி.ஆர்.பி.திட்டத்தில் பார்ட் ஏ-வில் உள்ள வேலைகள் முடிக்கப்படாததால் கடனாக வழங்கப்பட்டுள்ள 1330.39 கோடியை மானியமாக மாற்றித்தர வேண்டும். அதேபோல, மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்திற்காக 5 ஆண்டுகளுக்கு ஒதுக்கப்பட்ட 8647 கோடி ரூபாய் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற போதுமானதாக இல்லையென்பதால் மானியத் தொகையை 12,000 கோடியாக உயர்த்தி வழங்க வேண்டும்.
ஒன்றிய அரசின் மின்விநியோக நிறுவனத்தால் வசூலிக்கப்படும் 1 யூனிட்டிற்கான சேவை கட்டணம் 7 பைசாவை 1 பைசாவாக குறைத்து நிர்ணயித்துத்தர வேண்டும். ரைகார்-புகளூர்-திருச்சூர் உயர் மின்னழுத்த மின்வழிப்பாதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இந்த பாதையிலுள்ள அனைத்து பயனாளர்களும் பயனடையும் வகையில் 720 கோடியாக இருக்கும் நிதிச்சுமையை 216 கோடி வரை குறைத்து, 504 கோடி ரூபாயை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒன்றிய அரசின் மின்விநியோக கழகத்தின் மூலம் கொள்முதல் செய்து வழங்க வேண்டிய 1100 மெகாவாட் மின்சாரத்தை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலங்களுக்கு இடையிலான மின்பாதையை உபயோகப்படுத்துவதற்காக செலுத்த வேண்டிய தொகையிலுள்ள கணக்கீடு குறைகளை நிவர்த்தி செய்து டேன்ஜெட்கோவிற்கு மாதந்தோறும் ஏற்படும் கூடுதல் செலவான 48 கோடியை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மின்கொள்முதலுக்கு உத்தரவாதமாக, வங்கி உறுதி கடிதம் வழங்க வேண்டுமென்கிற உத்தரவினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பிரச்சனைகளை விவாதித்துள்ளார் அமைச்சர் செந்தில்பாலாஜி. இது குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் ஒன்றிய அமைச்சர் ஆர்.கே.சிங்.