சமீபகாலமாக பள்ளி, கல்லூரி மாணவிகள் எந்த ஒரு காரணத்திற்காகவும் எதைப் பற்றியும் சிந்திக்காமல் மாடியில் இருந்து குதித்துவிடும் கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கி இருப்பது பெற்றோர்களை ரொம்பவே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் தெற்கு கிராமத்தைச் சேர்ந்த ஆடிட்டர் செல்வக்குமாருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் குப்பகோணத்தில் ஒரு தனியார் கல்லூரியில் படித்து வரும் நிலையில் இளைய மகள் தரண்யா (17) அறந்தாங்கியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 பயோ மேத்ஸ் படிக்கிறார். மகனும் அதே பள்ளியில் சிபிஎஸ்இ 3ம் வகுப்பு படிக்கிறார்.
+1 மாணவி தரண்யா கடந்த 20ந் தேதி நடந்த இயற்பியல் பாடம் தேர்வு எழுதிவிட்டு வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுதவில்லை என்று விரக்தியில் பேசியவரை பெற்றோர் ஆறுதல் கூறி அமைதியாக்கி உள்ளனர். ஆனால், அந்த மன உளைச்சலில் இருந்து மீளாத நிலையிலேயே நாளை வெள்ளிக்கிழமை நடக்கும் உயிரியல் பாடங்களை படித்துக் கொண்டிருந்தவர் முதல் மாடியில் இருந்து திடீரென கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்துள்ளார்.
சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்து தலையில் அடிபட்டு மயங்கிக் கிடந்த தரண்யாவை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்துவிட்டிருந்தார். மாணவியின் இந்த விபரீத முடிவால் ஊரே சோகத்தில் உள்ளது. உறவினர்கள் கதறித் துடிக்கின்றனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரணை செய்து வரும் நிலையில், மாணவியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.