கரோனா வைரஸ் தொற்று பரவிக்கொண்டிருக்கும் நிலையில் ஜூன் 1 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அரசு அறிவிப்பு சரியானது இல்லை என அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர் மூ.ராஜேஸ்வரி பிரியா கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறும். சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தலின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது என்றார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜேஸ்வரி ப்ரியா, ஜூன் 1ஆம் தேதி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அரசு அறிவிப்பு சரியானது இல்லை. நோய்ப் பரவி கொண்டிருக்கும் தருவாயில் இவ்வளவு அவசரம் தேவை இல்லை. ஊரடங்கு முடிவடைந்த பிறகு நோய்ப் பரவும் தன்மை எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொண்ட பிறகே முடிவெடுக்க வேண்டும். அரசின் செயல் அவர்களது நிர்வாகத் திறனைச் சந்தேகிக்க வைக்கிறது. எதற்கு இந்த ஊரடங்கு? போக்குவரத்து எப்படி இருக்கும் என எல்லாம் கேள்வியாகவே உள்ளது என்றார்.