ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 4வது மாடியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகின்றது. இந்த அலுவலகத்தில் பொறுப்பு பொறியாளராக கோவையை சேர்ந்த கோபி, உதவி செயற்பொறியாளராக மோகன்பாபுவும் பணியாற்றி வருகிறார். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் சாலைப்பணிகள், கட்டுமான பணிகள் தொடர்பான திட்டமிடல், மற்றும் கட்டுமான பணிகளின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குவது உதவி செயற்பொறியாளரின் முக்கிய பணியாகும்.
இதே போல கட்டுமான ஒப்பந்ததாரர்களுக்கு தகுதி நிர்ணய அங்கீகாரம் வழங்குவதும் இவரது பணியாகும். இந்நிலையில், உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் ஒப்பந்தாரர்களிடமிருந்து டெண்டர்கள் விடப்பட்ட பணிகளுக்கான கமிஷன் தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு ஈரோடு லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி ராஜேஸ் தலைமையில் போலீசார் அதிரடியாக அலுவலகத்தில் புகுந்து சோதனை நடத்தினர். விடிய விடிய நடந்த இந்தச் சோதனை இன்று அதிகாலை 4 மணியளவில் நிறைவடைந்தது.
சோதனையின் முடிவில் மோகன் பாபுவிடமிருந்து ரூ.58 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத 10 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து உதவி செயற்பொறியாளர் மோகன்பாபு மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவர் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் தங்கி உள்ள கோபிசெட்டிபாளையம் அறையிலும், கோயம்புத்தூரில் உள்ள இவரது வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.