திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மதனாஞ்சேரி பகுதியில் ஊராட்சி செயலாளராக பணிபுரிந்து வருபவர் பாண்டியன். இவர் கடந்த 25 ஆண்டு காலமாக பணிபுரிந்து வருகிறார். ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயரை பதிவு செய்து பணம் பெற்று மோசடி செய்வதாகவும், குடிநீர் பிரச்சினையை தீர்க்க 12 மின் மோட்டார்களை சரி செய்ய பணம் எடுத்து அதை சரிவர செய்யாமல் 5 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு செய்துள்ளதாகவும், 2019 வறட்சிக் காலத்தில் சுமார் 18 லட்சம் ரூபாய் அரசு நிதி ஊராட்சியின் வளர்ச்சி பெறுவதற்காக ஒதுக்கப்பட்ட அந்த தொகையை 10% சதவீதமும் கூட ஊராட்சி பணிக்காக செய்யாமல் அதற்குரிய முறையான கணக்கை காண்பிக்காமல் அதிகாரிகள் துணையோடு முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார் என்கிற குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஆலங்காயம்-வாணியம்பாடி செல்லும் சாலையில் மார்ச் 2 ந்தேதி, அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பகுதி பொதுமக்கள்.
சுமார் 1மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு ஊராட்சி அலுவலகம் சென்று கண்டன கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை பணியிட மாற்றம் அல்லது முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளர் கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
அப்போது அங்கு வந்த ஊராட்சி செயலாளர் ஆதரவாளர்கள் , அவரது உறவினர் தனசேகர் சாலைமறியல் நடத்தினார். மேலும், ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்த இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாணியம்பாடி கிராமிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.