வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், போலி மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனாவிற்கு சிகிச்சை தருவதாக போலி மருத்துவர்கள் செயல்படுவதாக வேலூர் மாவட்ட சுகாதாரத் துறைக்குத் தகவல் போனதையடுத்து 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, போலி மருத்துவர்களைக் கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இன்று ஒரேநாளில் 10 போலி மருத்துவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். வேலூர், காட்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட பல பகுதிகளில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தவர்கள் மருத்துவர்கள் போல போலியாகச் செயல்படுவது தெரியவந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவர்களது கிளினிக்குகளும் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.