தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் 1980 காலகட்டத்தில் தொடங்கிய மொய் விருந்துகள் படிப்படியாக விரிவடைந்து பேராவூரணியை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் அருகில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், நெடுவாசல், வேம்பங்குடி தொடங்கி தற்போது ஆலங்குடி, வம்பன் வரையிலும் நடத்தப்பட்டு வருகிறது.
இரு மாவட்டங்களிலும் மொய் விருந்துகள் நடப்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடி மாதத்திலும் தஞ்சை மாவட்டத்தில் ஆவணி மாதம் என இரு மாதங்களும் ஊரெல்லாம் கறி சோறு கமகமக்கும். வெள்ளை வேட்டி சட்டைகளின் நடமாட்டமும் அதிகமாக இருக்கும். கட்டுக்கட்டாக பணம் எண்ண வங்கி அதிகாரிகளும், இயந்திரங்களும் பாதுகாப்புக்கு துப்பாக்கி ஏந்திய தனியார் பாதுகாவலர்களும் இருப்பார்கள்.
ஆயிரக்கணக்கானோருக்கு வேலையும் கிடைத்தது. ஆனால் கடந்த 5 வருடங்களாக கஜா புயல் தொடங்கி, கரோனா ஊரடங்குகளால் மொய் விருந்துகள் முடங்க தொடங்கிவிட்டது. கோடிகளில் மொய் வாங்கியவர்கள் கூட பல லட்சங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகின்றனர். பல கிராமங்களில் மொய் வரவு செலவுகளை துண்டித்து வருகின்றனர் ஆயிரக்கணக்கானோர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மொய் விருந்துகள் முடிவுற்ற நிலையில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் களைகட்ட தொடங்கியுள்ளது.
இன்று போவூரணி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் இல்ல காதணி மற்றும் மொய் விருந்து விழா காலையில் தொடங்கி நடந்தது. ஒரு டன் ஆட்டுக்கறியுடன் தடபுடலாக விருந்துகள் நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் என ஆயிரக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டு மொய் செய்தனர். மதியத்திற்கு பிறகு வசூலான மொய் பணம் எண்ணப்பட்ட போது ரூ.10 கோடிகள் வரை வசூலாகி இருந்தது. சுமார் ரூ.15 கோடிகள் வரை மொய் வசூலாகும் என்று எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கஜா புயல் தாக்கம், கரோனா ஊரடங்கு காரணமாக விவசாயம், தொழில்கள் முடங்கியதால் எதிர்பார்த்த அளவு மொய் வசூலாகவில்லை. ஆனாலும் இந்த ஆண்டு ஒரு தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் ரூ.10 கோடி வாங்கிய நம்ம எம்எல்ஏ அசோக்குமாருக்கு தான் என்கின்றனர்.
கடந்த வாரம் நெடுவாசலில் 30 பேர் சேர்ந்து நடத்திய மொய் விருந்தில் ரூ.14 கோடிகள் வசூலானது. ஆனால் பேராவூரணி அசோக்குமார் எம்எல்ஏ தனி ஒருவரின் மொய் வசூல் ரூ.10 கோடிகள். உறவினர்களும் நண்பர்களும் கொடுக்கும் கடன் தொகை தான் இது. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் அவர்கள் செய்த மொய் பணத்துடன் புதிதாக மொய் செய்ய வேண்டும். இந்த பணத்தை தொழில்களில் முதலீடு செய்தால் தொய்வின்றி மொய் செய்யலாம் லாபமாகவும் இருக்கும். வீடு கட்ட, நிலம் வாங்க என்று வருமானம் இல்லாமல் முடக்கினால் திரும்ப மொய் செய்ய சிரமப்பட வேண்டும் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.