அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைகள் முட்டல் மோதலில் தொடங்கி வழக்குகள் என தொடர்ந்து தற்பொழுது எடப்பாடி பழனிசாமி வசம் கட்சியையும் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் கொடுத்துள்ளது. மறுபுறம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் தான் தான் என ஓபிஎஸ் தரப்பு மாநாடு, டிடிவியுடன் சந்திப்பு என இரண்டாவது ரவுண்டுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''ஓபிஎஸ் டி.டி.வி.தினகரனை சந்தித்து பேசியுள்ளார். எல்லா ஊடகத்திலும் இந்த செய்தி வந்துள்ளது. இதில் பல்வேறு கருத்துக்களை அவர்கள் சேருகின்றபோது தெரிவித்திருக்கிறார்கள். எங்களைப் பொறுத்த வரைக்கும் மாயமானும் மண்குதிரையும் ஒன்று சேர்ந்துள்ளது. பூஜியம் பிளஸ் பூஜியம் இஸ் ஈக்குவல் டூ பூஜியம். அப்படித்தான் அவர்களுடைய இணைப்பு.
துரோகி துரோகி என்று டிடிவி தினகரன் ஓபிஎஸ்-ஐ கூறியுள்ளார். ஓபிஎஸ் டி.டி.வி.தினகரனை துரோகி என்று குறிப்பிட்டுள்ளார். ஆக இரண்டு துரோகிகளும் ஒன்றாகச் சேர்ந்து ஒரு அணியை உருவாக்குவதாக சொல்லி இருக்கிறார்கள். துரோகி என்று சொன்னாலே அது எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். அதோடு டி.டி.வி.தினகரன் கூடாரம் ஏற்கனவே காலியாகிக் கொண்டு இருக்கிறது. காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி ராமச்சந்திரன் எந்த கட்சிக்கும் விசுவாசமாக இருந்தது இல்லை'' என்றார்.