நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் தென்காசியில் கூட்டணி வேட்பாளரான கிருஷ்ணசாமியை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், ''திருச்சியில் மதிமுக சார்பில் கூட்டணிக் கட்சியை சேர்ந்த மதிமுக துரை வைகோ போட்டியிடுகிறார். பத்திரிகையிலும் ஊடகத்திலும் வந்த செய்தியை வைத்து நான் சொல்கிறேன், நீங்கள் எந்த சின்னத்தில் வேண்டுமானாலும் நிற்கலாம், அது உங்களது உரிமை என சொல்லி மதிமுகவிற்கு திமுக சீட்டு கொடுத்ததாக செய்திகளில் வந்தது. வைகோ என்றால் எப்படி இருந்தார் நாடாளுமன்றத்தில் அவருடைய குரல் வெண்கல குரலாக ஒலித்தது. தமிழகத்திற்கு நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பவர்களில் அவர் முக்கியமானவர்.
எதிரியாக இருந்தாலும் நாங்க பண்புள்ளவர்கள். ஒரு கூட்டணி என்று வைத்தால் முழு மரியாதை கொடுக்க வேண்டும். டாக்டர் கிருஷ்ணசாமியிடம் உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்யுங்கள் என உரிமை கொடுத்துவிட்டோம். ஆனால் திருச்சியில் நடைபெற்ற திமுக கூட்டணிக் கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்களுடைய சின்னத்தில் நிற்க வேண்டும் என்பதைப் போல கே.என் நேரு பேசுகிறார். அதேகூட்டத்தில் துரை வைகோ பேசும் போது மனம் வருந்தி அழுதுவிட்டார். அவரை அழ வைக்கிறீர்களே இதுதான் கூட்டணி தர்மமா? இதுதான் திராவிட மாடல் ஆட்சி'' என்றார்.