கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள கோ.ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்காக விண்ணப்பித்து கடந்த 3 ஆண்டுகளாகக் காத்து கொண்டிருந்தார். ஆனால் இலவச இணைப்பு கிடைக்காததால், தட்கல் முறையில் 3 லட்சம் ரூபாய் பணம் செலுத்தி மின் இணைப்பு பெற்றுள்ளார்.
இந்நிலையில் தட்கல் முறையில் பெற்ற மின் இணைப்புடன், மின்சாரத்தை அளவிட பயன்படுத்தப்படும் மின் மீட்டரை ஊழியர்கள் வைத்துள்ளனர். இதுகுறித்து மின்சாரத் துறை அதிகாரியிடம் கேட்டபோது, மின்சாரத்தை அளவிடும் கருவி பொருத்தப்பட்டதால் விவசாயிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளனர். ஆனாலும் மீட்டர் பொருத்தப்பட்டதால் இலவச மினசாரம் ரத்து செய்யப்படுமோ எனும் அச்சம் விவசாயிகளிடம் பரவியுள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், “கடந்த 1985-ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் போதிய மழை இல்லாத காரணத்தினாலும், நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் நிலத்தடி நீர் உறிஞ்சுவதாலும் நிலத்தடி நீர்மட்டம் அதாள பாதாளத்திற்குச் சென்று விட்டது.
தமிழக அரசு விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் மோட்டார்களில், ஒரு குதிரைத்திறன் மின்சார பயன்பாட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வசூலிக்க வேண்டும் என்றும், வருகின்ற ஜூன் 30-ஆம் தேதிக்குள் அதற்காக டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் 100 முதல் 150 அடி வரை உள்ள நீர் மட்டத்திற்கு 5 முதல் 10 குதிரைத்திறன் கொண்ட மோட்டார்களைப் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது நீர்மட்டம் 600 அடிக்கு மேல் சென்று விட்டதால், விவசாயிகள் ஒவ்வொருவரும் 400 அடி முதல் 600 அடிக்கு ஆழ்துளை கிணறு அமைத்து, 15 முதல் 20 குதிரைத்திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
தமிழகஅரசு கூறுவதுபோல் மின்சார கட்டணம் டெபாசிட் ஆக கட்ட வேண்டுமென்றால் 2 லட்ச ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு விவசாயியும் டெபாசிட் கட்ட வேண்டும். அப்படி ஒரு நிலை ஏற்படுமாயின் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்துவிட நேரிடும். எனவே இத்திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய மின் திட்டம் விவசாயிகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் விவசாயத்திற்கு இலவச மின் இணைப்பு தொடர்ந்து தர வேண்டும், மின் மீட்டர் பொருத்துவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால், விவசாய சங்கத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார்.