முன்னாள் முதலமைச்சர்கள் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அதிமுகவில் இரண்டு அணிகளாகச் செயல்பட்டு வருகின்றனர். இரண்டு அணிகளிலும் தினந்தோறும் ஆதரவாளர்களை இழுக்கும் படலமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உச்சக்கட்டமாகக் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து சென்னையில் நட்சத்திர ஓட்டலில், அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் புகழேந்தி தலைமையில் முதல் கட்டமாக நூற்றுக்கணக்கானவர்கள் ஓபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து இணைந்தனர்.
இதில் முன்னாள் சேர்மன் வெங்கடாசலம், தேவராஜ், தங்கராஜ், வெற்றிவேல், டாக்டர் ஜான் திமோத்தி, ராஜேந்திர கவடு உள்ளிட்டோர் அடங்குவர். இரண்டாம் கட்டமாக முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராஜ், கே.இ.கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேப்பனஹள்ளி வேட்பாளராக நிறுத்தப்பட்ட மது (எ) ஹேம்நாத், முன்னாள் சேர்மன் கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்தனர். மது (எ) ஹேம்நாத்தின் மனைவி லாவண்யா ஹேம்நாத் தற்பொழுது சூளகிரி ஒன்றிய சேர்மேனாக இருந்து வருகிறார்.
இதுபோன்ற சூழலில் ஓபிஎஸ் அணியில் இணைந்த மது (எ) ஹேம்நாத் அண்மையில் திடீரென முன்னாள் அமைச்சர் மு.தம்பிதுரையை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவிக்கிறார். மேலும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்த பொழுது காவேரிப்பட்டணத்தில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது புகார் அளித்து அவர்களைத் தாக்க முயன்ற சம்பவமும் நடந்தது.
இதுபோன்ற குழப்பங்களை ஆறுமுகம் உள்ளிட்டோர் ஏற்படுத்தி வருகின்றனர் என்ற பேச்சு அம்மாவட்ட அதிமுகவினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. ஆறுமுகம் தற்பொழுது ஒன்றிய செயலாளர் பதவிக்கு கோவிந்தராஜால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இதேபோன்று பலரும் பரிந்துரைக்கப்படுவதாக அதிமுகவினர் முகம் சுளிக்கின்றனர். இவரும் தம்பிதுரையை சந்தித்துள்ளார். அதேபோல் கே.பி.முனுசாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் அணியில் பதவிக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராக உள்ள கோவிந்தராஜ் தலைமையில் கட்சிப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டும் தொண்டர்கள் மத்தியில் நிலவுகிறது. எப்படி இவர்கள் தம்பிதுரையை சந்திக்கலாம் என்று ஓபிஎஸ் அணியில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மாநிலம் முழுவதும் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற நிலை நடைமுறையில் உள்ள பொழுது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் ஏன் ஆறு தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என தொண்டர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதிமுகவை பொறுத்தவரையில் மேற்கு கிழக்கு என இரண்டு மாவட்டமாகத்தான் செயல்படுகிறது.
இதுபோன்ற சூழலில், ஈபிஎஸ்ஸால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தற்பொழுது ஓபிஎஸ் அணிக்குச் செல்வதால் அவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்கும் பணிகளை தம்பிதுரை நடத்தி வருகிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் ஓபிஎஸ் அணியில் சேர்ந்தவர்கள் உண்மையிலேயே அவருக்கு ஆதரவாக சேர்ந்தார்களா என்ற சந்தேகம் எழுகிறது. இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் இடையே உச்சக்கட்ட குழப்பம் நீடித்து வருகிறது. ஓபிஎஸ் அணியிலேயே இரண்டு பிளவுகள் ஏற்பட்டு மோதல் வெடித்துள்ளது.