அதிமுகவில் பாஜகவின் இரண்டு சிட்டிங் எம்.எல்.ஏக்கள் இணைய இருப்பதாக அம்மன் அர்ஜுனன் என்ற அதிமுக எம்.எல்.ஏ தெரிவித்திருந்தார். இன்று 2.15 மணிக்கு பாஜக எம்எல்ஏக்கள் இருவர் அதிமுகவில் இணைய இருப்பதாக அவர் சொல்லியிருந்த நிலையில், அதனை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மறுத்துள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பில் இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ''எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்பு அதிமுகவை நோக்கி மாற்றுக் கட்சியில் இருந்து பல்வேறு பொறுப்புகளில் உள்ளவர்கள், அரசுப் பொறுப்பில் உள்ளவர்களும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகிறார்கள். நாங்கள் பாஜகவை போன்று யாரையும் வலை வீசி பிடிப்பதில்லை. நேற்று கூட பாஜக தலைவர் வியாபாரி போல கடை விரிச்சார். அந்த கடையில் வாங்குவதற்கு தான் ஆள் யாரும் வரவில்லை. அது போனியாகாத கடை. அதிமுகவை பொறுத்தவரை மக்களுக்கு தொண்டாற்றும் இயக்கம். எனவே பொதுவாகவே எல்லோருமே எங்களை நோக்கி வருவார்கள். நானும் உங்களை போல தான் செய்தி பார்த்தேன். பொறுத்திருந்து பாருங்கள்'' என்றார். அதேபோல் செய்தியாளர்களின் இதுகுறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி, 'நீங்கள் சொல்லித் தான் தெரிகிறது. வந்தால் சந்தோஷம்' என பதில் அளித்துள்ளார்.