Skip to main content

வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாதுகாக்க அதிரடி திட்டம்... காய் நகர்த்தும் வேட்பாளர்கள்... உஷாரான திமுக, அதிமுக!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் 11-ல் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய 7 ஒன்றியங்களில் தி.மு.க. தலைவர்களும், விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் அ.தி.மு.க. தலைவர்களும் யூனியன் சேர்மன் நாற்காலியில் அமர வேண்டும். வத்திராயிருப்பும் நரிக்குடியும் மட்டுமே இழுபறி நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆளும்கட்சியின் சித்துவிளையாட்டால், இவையனைத்தும் மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

dmk



வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 உறுப்பினர்கள், தி.மு.க. கூட்டணியில் 6 உறுப்பினர்கள் தேர்வாகி சமநிலையில் இருந்தாலும், ஒரே ஒரு சுயேட்சை உறுப்பினரான, ஜான் பாண்டியனின் த.ம.மு.க.வைச் சேர்ந்த ரேகாவை, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தங்கள் பக்கம் இழுத்துவிட்டது. டிராக்டர் ஒன்றும் ரூ.30 லட்சமும் தருவதாகப் பேரத்தை முடித்திருக்கின்றனராம். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 13-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகனே இந்த ஒன்றியத்தின் தலைவர் என்று முடிவாகிவிட்டதாம். துணைத் தலைவர் பதவிக்கு, 10-வது வார்டு (அ.தி.மு.க.) உறுப்பினர் பஞ்சவர்ணத்தின் பெயர் அடிபடுகிறது.


நரிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வில் 5 உறுப்பினர்களும், தி.மு.க.வில் 6 உறுப்பினர்களும், அ.ம.மு.க.வில் ஒரு உறுப்பினரும், சுயேட்சைகள் இருவரும் தேர்வாகி உள்ளனர். அ.ம.மு.க. உறுப்பினர் இந்திராணி தரப்பில், இரண்டு கட்சிகள் பக்கமும் அவருடைய கணவர் ஜெயராஜ் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஒன்றியம் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஏரியா என்பதால், தி.மு.க. தரப்பில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர் அன்புச்செல்வியின் கணவர் ரமேஷ், லட்சங்களை வாரியிறைத்து சுயேட்சைகளை இழுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இவரைக் காட்டிலும், அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 14-வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் கையே இந்த ஒன்றியத்தில் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால், நரிக்குடி ஒன்றியத்தையும் தாண்டி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள தி.மு.க.வினருக்கும் படியளப்பவராக இருக்கிறார் இந்த ரவிச்சந்திரன்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு தரப்புமே உஷாராகி, தங்களின் உறுப்பினர்களை திருச்செந்தூர், குற்றாலம் ஆகிய ஊர்களிலும், மாநிலம் கடந்து கேரளாவிலும் தங்கவைத்து, தங்கள் பிடியிலேயே வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்