தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாள் இன்று (24.02.2021) தமிழகம் முழுக்க அக்கட்சியினர் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுக தலைமையின் சார்பாக இன்று காலை அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் திருவுருவச்சிலைக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ். மற்றும் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், சசிகலா தான் தங்கியிருக்கும் சென்னை தி.நகர் இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செய்தார். அதன்பின் ஒருசில வார்த்தைகளையும் பேசினார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா, கடந்த பிப். 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து புறப்பட்டு பிப். 9ஆம் தேதி காலை சென்னை வந்தார். அவர் வந்ததும் தமிழக அரசியல் களம் அதீத சூடு பிடிக்கும் என்றும், அதிமுகவில் பெரும் மாற்றங்கள் நிகழும் என்ற பேச்சுகள் அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், சென்னை வந்த சசிகலா பொதுவெளியில் தோன்றாமல் மௌனம் காத்துவந்தார். 15 நாட்கள் கழித்து இன்று ஜெயலலிதா பிறந்தநாளைக் கொண்டாடினார்.
இந்நிகழ்ச்சி முடிந்தவுடன், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா சரத்குமார் சசிகலாவை நேரில் சந்தித்தனர். சில நிமிடங்கள் நடந்த இச்சந்திப்பிற்குப் பின், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சசிகலாவை சந்தித்துப் பேசினார். மேலும் இயக்குநர்கள் பாரதிராஜா மற்றும் அமீர் ஆகியோரும் சசிகலாவை சந்தித்துப் பேசினர். சசிகலாவை சந்தித்த இவர்கள், ‘இது சம்பிரதாயமான சந்திப்பு, நலம் விசாரித்தோம்’ எனத் தெரிவித்தனர். ஆனால், இது வெறும் நலம் விசாரிப்புடன் முடிந்திருக்காது. நிச்சயம் அரசியல் தொடர்பான பேச்சுகளும் இதில் இடம்பெற்றிருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
அரசியல் களத்தில் ஏற்கனவே, சசிகலா தலைமையில் தமிழகத்தில் மூன்றாவது கூட்டணி அமையும் என கருத்துகள் எழுந்துவரும் நிலையில், இவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இதனிடையே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணி, இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமென அதிமுகவும், தேமுதிகவும் சொல்லிவந்தன. ஆனால் பல இடங்களிலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், வெளிப்படையாக, “இன்னும் அதிமுக தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையைத் தொடங்கவில்லை. விரைவில் எங்களைக் கூப்பிட்டு தேர்தல் கூட்டணி குறித்துப் பேச வேண்டும்,” என்று தெரிவித்துவந்தார். அதேவேளையில், சசிகலா விடுதலையாகி சென்னை வந்த பிறகு, ஒரு செய்தியாளர் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்திடம் கேட்கப்பட்ட சசிகலா குறித்தான கேள்விக்கு, “ஒரு பெண்ணாக அவர் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது எனது விருப்பம்” எனத் தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் இருந்து இன்னும் வெளிப்படையாக தேமுதிகவிடம் தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை. மறைமுகமாகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் இருதரப்பிலிருந்து தகவல்கள் வெளிவராத நிலையில், சரத்குமார், சீமான் வரிசையில் தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்தும் விரைவில் சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.