திமுக அரசின் முதல் பட்ஜெட் கூட்டம் வருகிற 13ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. முதன்முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். இதற்கான ஏற்பாடுகளை நிதி அமைச்சகமும், பேரவைச் செயலகமும் இணைந்து கவனித்துவருகின்றன.
இந்த நிலையில், ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசின் கோட்டை கொத்தளத்தில் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார் மு.க. ஸ்டாலின். அவரது உரையில் பல முக்கிய அறிவிப்புகள் வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில், சுதந்திரத் தினத்தின் 75வது ஆண்டு என்பதால், ஆகஸ்ட் 15ஆம் தேதி நள்ளிரவில் சட்டமன்றத்தைக் கூட்டி, அந்த தினத்தை விமரிசையாக கொண்டாடலாமா என ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்தியாவுக்கு நள்ளிரவில் சுதந்திரம் கிடைத்ததை நினைவூட்டும் வகையில், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தேசத்தலைவர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்பையும் நினைவுகூர்ந்து போற்றிப் புகழ, சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை நள்ளிரவில் கூட்டலாமா என முதல்வர் ஆலோசிப்பதாக பேரவைச் செயலக அதிகாரிகள் தரப்பில் தகவல் பரவிவருகிறது.