தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் விரைவில் மாற்றப்படலாம் என்கிற தகவல் பரவி வருகிறது. புதிய கவர்னராக மத்திய சட்டத்துறையின் முன்னாள் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என்றும் பாஜக தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த ரேசில், ஹரியானாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பிரேந்திரசிங்கும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக கவர்னராக கடந்த 2017, செப்டம்பர் மாதம் நியமிக்கப்பட்டார் பன்வாரிலால் புரோகித். மத்திய அரசின் உத்தரவின்படி தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான முந்தைய அதிமுக அரசுக்கு இணையாக பேரலல் கவர்மெண்ட்டை நடத்துவது போல ஆய்வு பணிகளையெல்லாம் மேற்கொண்டார். இது அப்போது பலத்த சர்ச்சைகளையும் உருவாக்கியது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக, ஆட்சியை கைப்பற்றியதிலிருந்தே கவர்னரும் மாற்றப்படலாம் என்று பேச்சு அடிபட்டது.
தற்போது மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. அதற்கு முன்பாக 8 மாநில கவர்னர்களை மாற்றியமைத்தார் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த். அந்த மாற்றலின் பட்டியலில் தமிழக கவர்னரும் இருக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தமிழக அரசியலில் எதிரொலித்தது. ஆனால், அந்த பட்டியலில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இதற்கிடையே, கவர்னர் மாற்றலின் இரண்டாவது பட்டியல் ரெடியாகி வருவதாக தகவல் கசிந்துள்ளது.
தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்திரராஜனிடம் பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பு கூடுதலாக இருப்பதால், பாண்டிச்சேரிக்கு முழு நேர துணை நிலை ஆளுநர் நியமிக்க வேண்டிய ஆலோசனையும் டெல்லியில் நடந்துள்ளது. அதனால், தமிழகத்திற்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படும் போது பாண்டிச்சேரிக்கும் புதிதாக நியமிக்கப்படலாம். அல்லது பாண்டிச்சேரியின் துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து டாக்டர் தமிழிசை விடுவித்து முழு நேர ஆளுநராக நியமிக்கப்படலாம். தெலுங்கானாவுக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார். இந்த நிலையில், தமிழகத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரேந்தர் சிங் உள்ளிட்ட சீனியர்கள் பெயர் அடிபடுவதாக டெல்லி வட்டாரங்களில் செய்தி பரவியுள்ளது.