Skip to main content

“இதற்கெல்லாம் திமுகவை பயன்படுத்திக்கொண்டவர் கலைஞர்” - திருமாவளவன்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

"The artist who used DMK for all this" - Thirumavalavan

 

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு தொடக்க விழா கொண்டாட்டம் சென்னை பெரம்பூர் பின்னி மில் பகுதியில் நடைபெற்றது. இதில் திமுக அமைச்சர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். 

 

இவ்விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “கலைஞரை ஒரு கோணத்தில் ஒரு பரிமாணத்தில் முழுமையாக பார்த்துவிட முடியாது. கலைஞர் வெறும் அதிகார நுகர்வுக்காக அரசியலுக்குள் அடி எடுத்து வைத்தவர் அல்ல. சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என களமிறங்கியவர். 16 வயதில் இருந்து இறுதி மூச்சு வரை அவர் ஏற்றுக்கொண்ட கொள்கையில் இருந்து சிறிதும் நழுவாமல் இலக்கை நோக்கி வெற்றிகரமாக முன்னேறியவர். 1976 வரை ஒரு காலகட்டம். 1976ல் இருந்து 1989 வரை ஒரு காலகட்டம். 1989ல் இருந்து அவரது இறுதி மூச்சு வரை இன்னொரு காலகட்டம். கலைஞரின் வாழ்நாளை 3 காலகட்டமாக நாம் பகுத்தால் 76ல் இருந்து 89 வரையிலான 13 ஆண்டுகளில் அவர் சந்தித்த நெருக்கடிகள், இன்னல்கள், அவதூறுகள், அவமானங்கள் என எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு கட்சியை கட்டிக் காத்ததன் விளைவாகத்தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த நாற்காலியில் அமர்ந்திருக்க முடிகிறது.

 

13 ஆண்டுகளை கலைஞர் எப்படி கையாண்டார் என்பதை நாம் அறிந்து கொண்டால் அவரது உண்மையான வலிமையை நம்மால் உணர முடியும். பெரியாரின் கொள்கைகளை காக்க வேண்டும் என்று அண்ணா வழியை பின்பற்றினார். அண்ணா கொள்கை என்றால், பெரியாரின் கொள்கைகளை பாதுகாப்பாக அடித்தட்டு மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும், திசை திருப்பும் முயற்சிகளுக்கு இரையாகிவிடக்கூடாது, இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது தான். அண்ணா வழி எதற்கு? பெரியாரின் கொள்கைகளை மக்களிடையே சேர்ப்பதற்கு, சமத்துவ இலக்கை அடைவதற்கு, சனாதன மேலாதிக்கத்தை தகர்ப்பதற்கு. அதற்காகவே  இந்த அரசியலை பயன்படுத்திக்கொண்டார். திமுக எனும் கருவியை பயன்படுத்திக்கொண்டார். அத்தனை தளங்களிலும் ஆற்றல் வாய்ந்தவராக பரிணமித்தார்.

 

கலை, இலக்கியம், அரசியல், பண்பாடு, சமூகம் என தொட்ட துறைகளிலெல்லாம் துலங்கியவர் கலைஞர். அவர் எத்தனை சாதனைகளை செய்தாலும் என்றென்றும் நினைவுகூரத்தக்க சாதனைகள் சமத்துவபுரமும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதே. முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்த பின்னும் பெரியாரின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்று குறியாக இருந்தார். அதுதான் கலைஞர். பெரியார் நினைவு சமத்துவபுரம் இந்தியாவில் எந்த முதலமைச்சரும் எண்ணிப் பார்க்காத ஒன்று” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்