“200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. ஜெயிக்காவிட்டால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிருந்து விலகுவார்களா?'” என்று பிரசாந்த் கிஷோர் சவால் விட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 200 இடங்களுக்கும் அதிகமாக வெல்லாவிட்டால், அந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பா.ஜ.க.விலிருந்து விலகுவார்களா என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் முதல்வர் மம்தாவின் ஆளும் திரிணாமுல் காங்கிரசுக்கும் பா.ஜ.க.வுக்கும் கடந்த சில நாட்களாக மோதல்கள் வெடித்தபடி இருக்கின்றன. அண்மையில், மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசின் 7 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.
இதனால், மேற்கு வங்கத்தில் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோரின் நிறுவனமான ஐ-பேக் தான் வகுத்துக் கொடுத்துவருகிறது. இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் “குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரங்களால் பா.ஜ.க. வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது.
என்னுடைய ட்விட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரிலிருந்து விலகிவிடுகிறேன்” எனச் சமீபத்தில் சவால் விடுத்திருந்தார்.
இந்தநிலையில், இன்று மீண்டும் ஒரு சவாலை பா.ஜ.க.வுக்கு விடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர். பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த பி.கே., “மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் என்னுடைய கணிப்பின்படி 100 தொகுதிகளுக்கும் குறைவாகத்தான் பா.ஜ.க.வுக்குக் கிடைக்கும். ஒருவேளை 200 இடங்களுக்கு மேல் பா.ஜ.க. ஜெயிக்காவிட்டால், அந்தக் கட்சியின் தலைவர்கள் கட்சியிலிருந்து விலகுவார்களா?'' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதனால், டென்சனில் இருக்கிறார்கள் மேற்கு வங்க பா.ஜ.க. நிர்வாகிகள்.